டிசம்பர் 14ம் தேதி விவசாயிகள் போராட்டத்துக்கு வீரமணி முழு ஆதரவு… ஸ்டாலின் என்ன செய்யப் போகிறார்?

டிசம்பர் 14 இல் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு திராவிடர் கழகம் ஆதரவு தெரிவிக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.


வேளாண்மை துறை என்ற துறையே மாநில அரசினுடையது. மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வருகிறபொழுதே, அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டங்கள் எப்படி நிறைவேறியது? அந்தச் சட்டத்திற்கு நாடாளு மன்றத்தில் எதிர்ப்பு வந்தது. நாடாளுமன்றக் கமிட்டிக்கு அனுப்பச் சொன்னார்கள், ஆனால், அனுப்பவில்லை.

இந்தியா என்பது விவசாய நாடு. அப்படி இருக்கும்பொழுது, வேளாண் சட்டங்களைப்பற்றி விரிவாக நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல், அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்ததுபோல, நிறைவேற்றினார்கள். மாநிலங்களவையில் அந்த மசோதாக்களை எப்படி நிறைவேற்றினார்கள்?

கைதூக்கியோ, பொத்தானை அழுத்தியோ வாக்கெடுப்பு நடக்கவில்லை. குரல் வாக்கெடுப்புமூலம் நிறைவேற்றினார்கள்? அவைத் தலைவர் அமரவில்லை; அவை துணைத் தலைவர்தான் அப்பொழுது இருந்தார்.

அப்பொழுது இந்த மசோதாக்கள் தவறானது என்று, எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவரை சந்தித்து, அந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்கக் கூடாது என்று மனு கொடுத்தார்கள். மாநிலங்களையோ, விவசாயப் பிரதிநிதிகளையோ கலந்து ஆலோசிக்காமல், தானடித்த மூப்பாகக் கொண்டு வரப்பட்டதுதான் இந்த வேளாண் மசோதாக்கள்.

விவசாயிகளின் போராட்டம் எழுச்சியடைந்த வுடன், இப்பொழுது மத்திய அரசு என்ன சொல்கிறது? அந்த சட்டங்களில் சில திருத்தங்களை செய்கிறோம் என்று சொல்கிறது.

அதுமட்டுமல்ல, டில்லியில் எழுச்சியுடன் நடை பெற்றுவரும் விவசாயிகளின் போராட்டங்களைக் கொச்சைப்படுத்துகிறார்கள்.

ஒரு மத்திய அமைச்சர், ‘‘இதற்குப் பின்னணியில், பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் உள்ளன’’ என்கிறார். இன்னொருவர் சொல்கிறார், ‘‘எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுகின்றன’’ என்று. மற்றொருவர் சொல்கிறார், ‘‘இந்தப் போராட்டத்தினை விவசாயிகளே நடத்தவில்லை; தரகர்கள் எல்லாம் சேர்ந்து நடத்துகிறார்கள்’’ என்று.

டில்லியில், விவசாயிகள் கொட்டும் பனியில், குடும்பம் குடும்பமாக நடுரோட்டில் அமர்ந்திருக்கிறார்கள்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் எல்லாம் டில்லியில் நடைபெறும் போராட்டத்திற்குச் சென்றுவிட்டதால், அறுவடை செய்வதற்கு ஆட்கள் இல்லாததால், பெண்கள் அறுவடை செய்ய புறப்பட்டுவிட்டார்கள். ஆகவே, மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலன்களைக் காக்கவேண்டுமே தவிர, அவர்களின் வாழ்வதாரங்கள் பாதிக்கப்படக் கூடாது. அதற்காகத்தான் தீர்மானமும் போட்டிருக்கிறோம்.

இந்தியாவினுடைய வரலாற்றில், இவ்வளவு கட்டுப்பாட்டுடன், ஒரு சிறு வன்முறை இல்லாமல் நடந்துகொண்டிருக்கின்ற விவசாயிகளின் போராட் டம் இன்றைக்கு 16 நாள்களாக நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவேண்டும். ஜனநாயகம் என்பது மக்கள் கருத்து. மக்கள் விரும்பவில்லை என்கிறபொழுது, அதனை மாற்றிக் கொள்ளவேண்டும். எனவே வரும் 14ம் தேதி பாரத் பந்துக்கு ஆதரவு என தெரிவித்துள்ளார் கி.வீரமணி.

இவர் வழியில் தி.மு.க.வும் ஆதரவு தெரிவிக்குமா என்பதுதான் கேள்வி.