அமைச்சர் ஜெயக்குமார் தலையில் அந்த மாடு என்ன மேய்ந்தது? பூம்பூம் மாட்டுக்காரன் பண்பாடு

அமைச்சர் ஜெயக்குமாருக்கு தமிழ் பண்பாட்டின் மீது அபார மோகமாம். அதனால் பூம்பூம் மாட்டுக்காரனுக்கும் மாட்டுக்கும் அவர் செய்த மரியாதை, நெட்டிஷன்களிடம் கடும் நகைச்சுவையைத் தூண்டியுள்ளது.


பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாலே விரட்டியடிப்பதுதான் இன்றைய தலைமுறையின் செயல். ஆனால், முந்தைய காலத்தில் பூம்பூம் மாட்டுக்காரன் வந்தாலே நல்ல செய்தி வரும் என்று நினைத்து வரவேற்று மரியாதை செய்வார்கள். 

அந்த செயலை இப்போது செய்திருக்கிறார் ஜெயக்குமார். ஆம், வீடு தேடிவந்த பூம்பூம் மாட்டுக்காரனைப் பார்த்ததும் சந்தோஷமாகிவிட்டார். அந்த மாட்டிடம் ஆசிர்வாதம் வாங்கியதுடன், மாட்டுக்காரனுக்கு மரியாதை செய்து அனுப்பியிருக்கிறார்.

இதுகுறித்துப் பேசிய ஜெயக்குமார், ‘‘பல ஆண்டுகளுக்குப் பிறகு பூம் பூம் மாட்டுக்காரர் ஒருவரை நேரில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மாட்டின் தலையசைப்பும், பூம் பூம் மாட்டுக்காரரின் பேச்சும் என்னுள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தோண்டி எடுத்து கீழடி நாகரீகம் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் அதேவேளையில், நாம் இத்தகைய பூம் பூம் மாட்டுக்காரன் போன்றவர்களை மறந்து விடக்கூடாது. இவர்களை காப்பதும் ஒன்றுதான், நமது நாகரீகத்தை காப்பதும் ஒன்றுதான்’’ என்று கூறியிருக்கிறார்.

ஆனால், என்ன தைரியத்தில் தலையை மாட்டு வாயில் கொடுத்தார் என்பதுதான் நெட்டிஷன்கள் கேள்வி?