புரட்டாசி மாதத்தில் இந்த காரியங்களைச் செய்யக்கூடாது. ஏன் தெரியுமா?

'பெருமாள்" என்றாலே அனைவரின் நினைவிற்கு வருவது 'புரட்டாசி" மாதம். விரதமிருந்து வழிபடும் பக்தர்கள் அனைவரின் விருப்பங்களை நிறைவேற்றுபவராக இருக்கும் பெருமாளை வழிபடும் தெய்வீகமான மாதம் இந்த புரட்டாசி மாதம் தான்.


புரட்டாசி மாதத்தில், சூரியன் 'கன்னி" ராசியில் பெயர்ச்சியாகி தென்திசையை நோக்கி தனது பயணத்தை தொடங்கும் மாதமாக இருக்கிறது. தென்திசை என்பது 'எமதர்மன்" இருக்கும் திசையாகும். புரட்டாசி மாதத்தில் தான் பித்ருக்களை வழிபடுவதற்கு சிறந்த தினமான 'மகாளய அமாவாசை" தினமும் வருகிறது. மோட்ச பதவியை அளிக்கும் நாராயணனை விரதமிருந்து வழிபடுவதற்கும், மறைந்த நமது முன்னோர்களை வழிபடுவதற்கும் சிறந்த மாதமாக கருதப்படுகிறது. தெய்வங்களின் அருளாசியும், பித்ருக்களின் அருளாசியும் ஒருங்கிணைந்து புரட்டாசியில் கிடைப்பதால் இந்த மாதம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. 

வீட்டில் எந்த ஒரு சுபகாரியமாக இருந்தாலும், அதைச் செய்வதற்கு நல்ல நாள், நல்ல நேரம், நன்மை தரும் மாதங்கள் என்று பார்த்து பார்த்து செய்வதை வழக்கமாக நம் முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள். 

அந்த வகையில் புரட்டாசி மாதத்தில் நடைபெறவேண்டிய சுப நிகழ்வுகள் : 

பெருமாள் வழிபாடு 

நவராத்திரி பூஜை செய்தல் 

விரதம் இருத்தல் 

புரட்டாசியில் பிறந்தவர்கள் அறிவு, ஆற்றல், விவேகம், சமயோசித புத்தி மற்றும் சிறந்த யுக்தி கொண்டவர்களாக திகழ்வார்கள். இந்த மாதத்தில் வரும் நவராத்திரியின் கடைசி நாளான விஜயதசமியில் குழந்தைகளுக்கு புதிதாக கல்வி கற்றுக்கொள்ள தொடங்குவது சிறந்தது. 

புரட்டாசி மாதத்தில் செய்யக்கூடாத சுப நிகழ்ச்சிகள் : 

புதிய வீடு கட்ட கால் கோல் விழா வைத்தல் 

புதிய வீடு வாங்குதல் 

புதிதாக தொழில், வியாபாரம் தொடங்குதல் 

கிரகப்பிரவேசம் அல்லது புதுமனை புகுவிழா. வேறு புது வீட்டில் வசிக்க குடிபுகுதல் போன்ற சுபகாரியங்கள் இந்த மாதத்தில் செய்யப்படுவதில்லை. 

இந்த புரட்டாசி மாதத்தில்தான் இரணியன் தனது அரண்மனையிலேயே நரசிம்ம மூர்த்தியினால் சம்ஹாரம் செய்யப்பட்டார். இதன் காரணமாக புரட்டாசியில் நமது முன்னோர்கள் சுபகாரியங்கள் வைப்பதை தவிர்த்தனர்.