வீட்டு மனை வாங்கப் போறீங்களா? அளவும், திசையும் இப்படி இருக்குதா?

இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் தனக்கான இருப்பிடத்தை தேர்வு செய்கிறது.


அதுபோல மனிதனும் தனக்கான இருப்பிடமான வீட்டை தேர்ந்தெடுப்பதில் முக்கிய கவனம் செலுத்துகிறான். மேலும், அதுவே தனது வாழ்நாள் சாதனையாகவும், வெற்றியாகவும் காண்கிறான். நல்ல வீடு அமைய சிறந்த மனையை தேர்ந்தெடுப்பது மிக முக்கியமானதாகும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் மனை ஒரு நல்ல வாஸ்துபடி வீடு அமைப்பதற்கு முதல் படியாக அமைகிறது.

மனையை தேர்வு செய்யும்போது சில முக்கிய விஷயங்களை கவனிக்க வேண்டியுள்ளது. மனையை தேர்வு செய்யும்போது அதன் வடிவம், சதுரம் அல்லது செவ்வகமாக இருக்க வேண்டும். வேறு வடிவில் வாங்கினாலும் அதனை கட்டுவதற்கு முன் சதுரம் அல்லது செவ்வகமாக அமைத்துவிட்டு மற்ற இடத்தை உபயோகப்படுத்தாமல் விட்டுவிட வேண்டும்.

சதுர வடிவில் இருக்கும் மனை முதல்தரமான நன்மைகளை அளிக்க வல்லது. அனைத்து திசையிலும் சமமான அளவு இருக்கும் மனைகள் வாழ்வதற்கு ஏற்ற அற்புதமான இடம் என வாஸ்துவில் கூறப்பட்டுள்ளது. சதுர மனைகளில் வீடு கட்டி குடியேறும் போது அந்தக் குடும்பத்தினருக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். வியாபாரிகள், அரசு ஊழியர்களுக்கு இந்த மனை ஏற்றது.

சதுர மனைக்கு அடுத்தபடியாக செவ்வக மனை வருகிறது. இது சதுர மனை அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு நல்ல பலன்களை வழங்கும். 40க்கு 60 அல்லது 60க்கு 40 என்ற நீள-அகலத்தில் உள்ளது செவ்வக மனைகளாகும். அரசு தொடர்பான பணியில் இருப்பவர்கள், அமைச்சர்களுக்கு இதுபோன்ற அமைப்புடைய மனை ஏற்றத்தைத் தரும். பொதுவாகவே சதுரம் மற்றும் செவ்வக மனைகளே வாழ்வதற்கு தகுதியானவை.

மனைக்கு வடகிழக்கு பகுதி பள்ளமாகவும், தென்மேற்கு பகுதி உயரமாகவும் இருக்க வேண்டும். இயற்கையாகவே தென்மேற்கு பகுதியில் குன்றுகளோ, கோவில் கோபுரமோ, தொலைபேசி கோபுரமோ, உயர்ந்த மரங்களோ அமைந்தால் சிறந்தது. வடகிழக்குப் பகுதியில் இயற்கையாகவே ஏரி, குளம், பொதுக்கிணறு அமைந்தால் உத்தமம்.

மனைக்கு கிழக்கு திசையிலும், வடக்கு திசையிலும் தெருக்கள் இருக்க வேண்டும். அந்த தெருக்கள் மனைக்கு வடகிழக்கு கிழக்கிலோ அல்லது வடகிழக்கு வடக்கிலோ தெருக்குத்து அமையும் வகையில் இருத்தல் வேண்டும். அவ்வாறு அமையப்பெற்று இருந்தால் அந்த மனையை வாங்குவது நல்லது.

நன்மை தராத தவறான தெருக்குத்து எனப்படும் வடமேற்கு-வடக்கு, தென்கிழக்கு-கிழக்கு, தென்மேற்கு-தெற்கு, தென்மேற்கு-மேற்கு இந்த திசைக்கு எதிரே தெரு போனால் அந்த மனையை 100% நிச்சயமாக வாங்கக்கூடாது. மனை சரியாக அமைப்பில் இல்லாவிட்டால், அதில் எவ்வளவு சரியான வாஸ்து முறைப்படி வீடு கட்டினாலும், நற்பலன்களை தராது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

வாஸ்து என்பது இயற்கையை அனுசரித்து செல்லும் எண்ண மாற்றமே. உதாரணமாக, உங்களது வீட்டின் கிழக்குப் பகுதி இயற்கையோடு ஒத்த வாஸ்து அமைப்பில் இருந்து சூரிய ஒளியானது வாஸ்து முறைப்படி உங்கள் வீட்டில் உட்புகுந்தால் உங்கள் வாழ்வில் எல்லாம் சாத்தியமே. மேலும் உங்கள் வீட்டில் தவறு இருப்பின் அதை திருத்தி கொள்வதே சாலச் சிறந்தது. அதை விடுத்து பரிகாரம் என்பது தேவையற்ற பணவிரயமாக்கும்.