திருமகள் எங்கெல்லாம் வாசம் செய்கிறாள்? அவளை நம் இல்லத்துக்கு வரவழைப்பது எப்படி?

திருப்பாற்கடலை கடைந்த போது, கடலில் இருந்து தோன்றியவள் லட்சுமிதேவி. திருமகள் என்னும் பெயர் கொண்ட அவளை, திருமால் மணம் செய்து தன் நெஞ்சத்தோடு வைத்துக்கொண்டார்.


இந்த லட்சுமிதேவியானவள் பல இடங்களில் வாசம் செய்கிறாள். அந்த இடங்களை பார்க்கலாம். யானையின் முகம், பசுவின் பின்புறம், வாசனை உள்ள வெள்ளை மலர்கள், விளக்கு, சந்தனம், தாம்பூலம், கோமியம், வேதம் ஓதிய சான்றோர்கள், உள்ளங்கை, குதிரை, வேள்விப்புகை ஆகியவற்றில் மகாலட்சுமி வசிக்கிறாள். 

வில்வ மரம், துளசி செடி, நெல்லி மரம், சங்கு, பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள், சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, கண்ணாடி ஆகிய மங்களப் பொருட்களில் மகாலட்சுமி நித்தியவாசம் புரிகிறாள். 

அழகு, தைரியம், அடக்கம், அறிவு, ஆற்றல், தர்மசிந்தனை, பொறுமை, தெய்வபக்தி, ஐம்புலன் அடக்கம், சத்துவ குணம் இத்தகைய மனோபாவம் உடைய மனிதர்களிடத்தும் திருமகள் நிலையாக வாசம் செய்கின்றாள். 

தேவர்களிடத்திலும், பிரம்ம ஞானியர்களிடத்திலும், பரமனடியார்களிடத்திலும், பக்தி உள்ளோர் இதயங்களிலும், பசுக்களை பராமரிக்கும் பெண்களிடத்திலும், லட்சுமிதேவி வாசம் புரிகிறாள். 

பயனை கருதாமல் தர்மத்தை கடைபிடிப்பவர்கள், தர்மம் தெரிந்து அதன்படி நடப்போர், காலத்தை வீணாக்காதோர், தியானம், தத்துவ ஞானத்தை விரும்புவோர், வீட்டையும், வீட்டிலுள்ள பாத்திரங்களையும் சுத்தமாக வைத்து, தான்யங்களை சிதறாமல் வைத்துக்கொள்ளும் வீடுகளிலும் லட்சுமிதேவி வசிக்கிறாள். 

பெரியோர்களுக்குப் பணிவிடை செய்யும் பெண்களிடம், அடக்கமும், பொறுமையும், கடமை உணர்வும், தர்மத்தின் சிரத்தையும் உள்ள பெண்களிடமும் லட்சுமிதேவி வாசம் செய்கிறாள். 

இல்லங்களை லட்சுமி கடாட்சத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் லட்சுமிதேவி நம்முடனேயே வாசம் செய்வாள். அதிகாலையில் துயில் எழுந்து, நீராடி, சூரியன் உதயமாவதற்கு முன்னால் வீட்டு வாசலை பசு சாணத்தால் மெழுகி, கோலமிட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.  இல்லத்தில் ஏற்றப்படும் விளக்கு தீபத்தில் லட்சுமி தேவி நிரந்தரமாக குடிகொண்டிருக்கிறாள்.