மே 3ந் தேதியுடன் முடியக்கூடாது..! அதன் பின்னரும் ஊரடங்கை 2 வாரங்கள் நீட்டிக்கணும்..! பீதி கிளப்பும் முதலமைச்சர்!

ஊரடங்கு உத்தரவு மே மூன்றாம் தேதியுடன் முற்றிலுமாக தளர்த்தபடாமல் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டுமென மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாரத பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தன்னுடைய கோர தாண்டவத்தை காட்டி வருகிறது. இந்த நாள் வரை இதற்கு சரியான மருந்து கண்டுபிடிக்கப்படாததால் சமூக விலகலை கடைப்பிடிப்பது மட்டுமே இந்த நோயின் தாக்கத்திலிருந்து நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள இயலும் என்பதற்காக மத்திய அரசாங்கம் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு தற்போது நீட்டிக்கப்பட்டு வரும் மே மூன்றாம் தேதி வரை அமலில் இருக்கும் என அரசாங்கம் உத்தரவிட்டது. 

ஆனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் தினந்தோறும் பல பேர் புதியதாக இந்த நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் ஊரடங்கு உத்தரவை தளர்த்தி விட்டோம் என்றால் மீண்டும் இந்த வைரஸின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்படுவார்கள் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார். சமீபத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பாரத பிரதமர் நரேந்திர மோடியுடன் காணொலிக் காட்சி மூலமாக ஊரடங்கு உத்தரவை நீடிப்பது பற்றி தன்னுடைய ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பகிர்ந்திருக்கிறார்.

அதாவது இந்த ஊரடங்கு உத்தரவை தளர்த்துவதில் நாம் மூன்று கட்டங்களாக செயல்பட வேண்டும் என அவர் கூறியிருக்கிறார். மே நான்காம் தேதி முதல் 25 சதவீதம் ஊரடங்கு உத்தரவை முதலில் தளர்த்த வேண்டும். மே 4 க்கு பின்னர் இரண்டாவது வாரத்தில் 50% ஊரடங்கு உத்தரவை நாம் தளர்த்த வேண்டும். இதனைத் தொடர்ந்து வரும் மூன்றாவது வாரத்திற்கு மேல் 100% ஊரடங்கு உத்தரவை தளர்த்த வேண்டும் என ஆலோசனை வழங்கி இருக்கிறார்.

100% ஊரடங்கு உத்தரவை தளர்த்தினாலும் போக்குவரத்து சேவைகளில் நாம் மிக ஜாக்கிரதையாக கையாள வேண்டும் எனவும் அவர் கூறியிருக்கிறார். நீண்ட தூரம் செல்லும் ரயில்களையும் சர்வதேச விமானங்களையும் அனுமதிக்கக்கூடாது என அவர் கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் கொரோனா வைரஸ் தாக்குதலால் அதிகமாக பாதிக்கப்பட்டு ஹாட்ஸ்பாட்டுக்கள் என குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளையும் நாம் உற்றுநோக்க வேண்டும் என அவர் கூறியிருக்கிறார்.

மேலும் பேசிய அவர் இந்த கொரோனா வைரஸை கையாள்வதற்கு மேற்குவங்க அரசு தயாராக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.