கோவையில் ராகுலுக்கு அமோக வரவேற்பு... உருவாகிறதா புதிய கூட்டணி...? கொந்தளிக்கும் ஸ்டாலின்...

மதுரை ஜல்லிக்கட்டுக்கு வந்த ராகுலுக்கு மக்களிடம் நல்ல மதிப்பும் வரவேற்பும் இருந்தது. ஆகவே, தொடர்ந்து தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்யத் தயார் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில்தான் பாண்டியில் தனித்து நிற்கலாமா என்று ஆழம் பார்த்தது தி.மு.க.


அதனை ஆரம்ப கட்டத்திலேயே கேள்வி எழுப்பினார் ராகுல். அதனால், உடனடியாக பல்டி அடிக்க வேண்டிய நிலைக்கு ஆளானார். இதையடுத்து பா.ஜ.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் ரகசிய உடன்பாடு இருக்கிறதா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வருகிறது. 

இந்த சம்பவத்திற்குப் பிறகு காங்கிரஸ் ரொம்பவே மாறிவிட்டது. ஆம், அடிமை போன்று இருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் வருகையால் வீரம் வந்துவிட்டது. தமிழகத்திலும் புதுவையிலும் தனித்துப் போட்டி என்று அறிவித்துவிட்டனர்.

இதனால் ஸ்டாலின் டென்ஷனில் இருந்தார். ஏனென்றால் காங்கிரஸ்க்கு 15 தொகுதிகள் என்று பேச்சைத் தொடங்கி 20 தொகுதிகளுக்குள் முடித்துவிட வேண்டும் என்பதுதான் அவரது திட்டம். ஆனால், அதற்கு காங்கிரஸ் அசைந்து கொடுப்பதாக இல்லை.

அதனால்தான் இப்போது கோவைக்கு ராகுலை அழைத்துவந்து பிரசாரம் செய்வதற்கு ஏற்பாடு செய்துவருகிறது. இதற்கு சாதாரண பொது மக்களிடம் அமோக வரவேற்பு காண முடிகிறது. எனவே, காங்கிரஸ், கமல்ஹாசன், பா.ம.க. ஆகிய கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி அமைய வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.

அப்படியொரு கூட்டணி அமையும் பட்சத்தில், சிறுபான்மையினர் ஓட்டு அப்படியே காங்கிரஸ் கட்சிக்குப் போய்விடும் என்பதால் மீண்டும் ஒரு முறை தி.மு.க. தோல்வியை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, என்னதான் செய்வது என்று டென்ஷனில் இருக்கிறாராம் ஸ்டாலின்.