தொடையைத் தட்டினால் அபாயம்! ஜோதிடவியல் என்ன சொல்கிறது தெரியுமா?

தொடை தட்டுதல் என்பது பெற்றோருக்கான அந்திமச்சடங்கின்போது செய்யப்படுகின்ற ஒரு நடைமுறை ஆகும்.


தனது மடி மீது படுக்க வைத்து தொடையை ஆட்டிக்கொண்டே நம்மைத் தாலாட்டி, சீராட்டி வளர்த்த பெற்றோருக்கு நாம் செய்கின்ற நன்றிக்கடன். ஈர வஸ்திரம் கட்டிக்கொண்டு சிதை மீது வைக்கப்பட்டிருக்கும் உடலை தொடையைத் தட்டிக்கொண்டே சுற்றி வருவார்கள். அவ்வாறு தொடையைத் தட்டும்போது கர்த்தாவின் வஸ்திரத்தில் இருக்கும் ஈரமானது சிதையில் வைக்கப்பட்டிருக்கும் உடலின் மீது படும். அந்த ஈரத்தில் இருக்கும் வாசத்தினைக் கொண்டு நாம் பெற்ற பிள்ளை நமக்கான அந்திமக் கடனை செய்கிறான் என்பதை இறந்த ஆத்மா உணர்ந்து கொள்ளும்.

அதுமட்டுமல்லாது ஜோதிட ரீதியாக மனித உடற்கூறு இயலை பிரிக்கும்போது ஒன்பதாம் பாவகம் என்பது தொடையைக் குறிக்கும். இதே ஒன்பதாம் பாவகம் என்பதுதான் கர்ம ஸ்தானம், பித்ரு ஸ்தானம் என்று பிரித்தறியப்படுகிறது.

பித்ருக்களுக்கான கர்மாவினைச் செய்யும்போது மட்டுமே தொடையைத் தட்ட வேண்டும் என்பது ஜோதிடவியல் ரீதியாகவும் உணரப்படுகிறது. இதனால்தான் சாதாரண நாட்களில் தொடையைத் தட்டக்கூடாது என்று பெரியவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.