வல்லரசுகளால் முடியாததை சாதித்துக்காட்டினோம். .! திருச்சியில் எடப்பாடியின் எகிறல் பேச்சு.

கொரோனா காலத்தில் தில்லாக சுற்றுப்பயணம் செய்துவருகிறார் எடப்பாடி பழனிசாமி.


இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில், கொரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகள் மற்றும் முக்கொம்பு கதவணை கட்டுமானப் பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் எடப்பாடி பேசினார்.

அப்போது அவர், ‘இந்த புதிய நோய் தொற்று ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகப் பரவும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதாரத் துறை, ஐ.சி.எம்.ஆர்., நம்முடைய மருத்துவ வல்லுநர்கள், நிபுணர்கள் சொல்கின்ற வழிமுறைகளை நம்முடைய அரசு அறிவித்து, அதை மாவட்ட நிர்வாகம் முறையாக கடைபிடித்ததன் விளைவாக, வைரஸ் தொற்றை இன்றைக்கு நாம் தடுக்கின்ற நிலையில் இருந்து கொண்டிருக்கின்றோம். 

உலக அளவிலேயே வல்லரசு நாடுகளில் கூட இந்த வைரஸ் பரவலை தடுக்க முடியாத ஒரு சூழல் இருக்கின்ற காலகட்டத்தில், தமிழகத்தில் இந்த வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு கடுமையான முயற்சி எடுத்து இன்றைக்கு கட்டுக்குள் வைத்திருக்கிறோம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணிகள் எந்த அளவிற்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, என்பதையெல்லாம் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் தெரிவிக்க உள்ளார்கள். 

அதேபோல, மாண்புமிகு அம்மாவினுடைய அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எவ்வாறு நடந்து கொண்டிருக்கின்றது என்ற விவரமும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கின்றன. விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்களை அம்மாவினுடைய அரசு அறிவித்திருக்கின்றது. அந்தத் திட்டங்கள் எல்லாம் முழுமையாக விவசாயிகளுக்கு சென்று சேர்ந்திருக்கின்றதா என்பதைப் பற்றியும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்க இருக்கின்றோம். 

அதேபோல, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு அரசு அறிவித்த கடன்கள் முழுமையாக மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு சென்றடைந்து, அதை அவர்கள் முழுமையாக பயன்படுத்தி கொண்டார்களா என்ற விவரங்கள் எல்லாம் இந்த கூட்டத்திற்கு பின்பு விவாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.