தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்! வாட்டர் கேனை திருடும் அவலம்!

கோடைக்காலத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுவது இயல்பாகிவிட்டது. இதன் விளைவாக சென்னை சூளைமேடு பகுதியில் மர்ம ஆசாமிகள் தண்ணீர் கேன்களை திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை நகரில் பெரிதும் நெரிசலாக இருக்கக்கூடிய இடங்களில் சூளைமேடு பகுதியும் ஒன்றாகும். மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் இடமாக கருதப்படுகின்றது. இன்று அதிகாலை, சூளைமேடு பகுதியில் உள்ள ஒரு உணவகத்தின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் கேன்களை திடீரென்று காணவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த உரிமையாளர் தன்னிடம் இருந்த சிசிடிவி கேமராவை கண்காணித்தார். அதில் ஆட்டோவில் வந்த இரண்டு மர்ம ஆசாமிகள் லபக்கென்று வாயிலில் இருந்த தண்ணீர் கேன்களை பறித்து சென்றது தெரியவந்தது. 

தண்ணீர் கேன் திருட்டு தொடர்ந்து நடைபெறுவதால் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதாவது, சூளைமேடு அண்ணா நெடுஞ்சாலையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட கடைகளில் தண்ணீர் கேன்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. வழக்குப்பதிவு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தண்ணீரைத் திருடும் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டதா  என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர். இந்த நிலைமை தொடர்ந்தால் நிச்சயமாக தண்ணீரினால் மூன்றாம் உலகப்போர் ஏற்படுவது உறுதி என்று ஆர்வலர்கள் யூகிக்கின்றனர்.