டெல்லியில் வன்முறை - 4 பொதுமக்கள், ஒரு போலீசு உயிரிழப்பு!

தலைநகர் டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் அமைதியாக நடந்துவந்த குடியுரிமைச் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் பாசகவினர் எதிர்ப்போராட்டம் நடத்தியபோது ஏற்பட்ட வன்முறையில் பொதுமக்கள் நால்வரும் போலீஸ்காரர் ஒருவரும் உயிரிழந்தனர்.


ஐம்பது நாள்களுக்கும் மேலாக நடந்துவரும் சாகின்பாக் போராட்டம் தவிர்த்து, வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத் மற்றும் மௌஜ்பூர் ஆகிய மெட்ரோ ரயில்நிலையங்களுக்கு இடையே வன்முறை வெறியாட்டங்கள் அதிக அளவில் நடந்துள்ளன. காலை 10 மணிக்கு தொடங்கிய வன்முறையானது மாலை 5 மணிக்குதான் சற்று தணிந்திருக்கிறது.

கடந்த சனியன்று குடியுரிமைச் சட்டத்திருத்த எதிர்ப்பாளர்களின் போராட்டத்தால் அப்பகுதியில் சரக்குப்பெட்டகப் போக்குவரத்துப் பாதை முடக்கப்பட்டுள்ளது. இதை சாக்காக வைத்து மறுநாள் ஞாயிறன்று பாஜகவின் கபில் மிஸ்ரா, போலீசுக்கும் சட்டம் ஒழுங்குக்கும் சவால்விடும்வகையில் பேசினார்.

அந்தப் பேச்சு அடங்கிய காணொலி தலைநகரில் தீயாய்ப் பரவியது. அதில், “டிரம்ப் இருக்கும்வரைதான் நாங்கள் பொறுத்திருப்போம். அதற்குள் போராட்டக்காரர்களை அங்கிருந்து விரட்டியடிக்காவிட்டால் நாங்கள் போலீசின் வார்த்தைகளைக் கேட்கமாட்டோம்” என சவால்விடும்வகையிலும் எச்சரிக்கைவிடுவதைப்போலவும் பேச, பிரச்னை சூடுபிடித்தது.

    

ஜாப்ராபாத் மற்ரும் மௌஜ்பூர் இடையே நேற்று திங்கள் காலை முதலே ரிக்சாவில் சென்றவர்கள் வீதியில் இழுத்துவிடப்பட்டனர். பலர் அடித்து உதைக்கப்பட்டனர். வன்முறை கும்பலின் கைகளில் வாள்களும் இருந்துள்ளன. சிலர் பெட்ரோல் குண்டுகளை கைகளில் வைத்திருந்ததை பத்திரிகையாளர்கள் படம்பிடித்துள்ளனர். சிலர் வீடுகளை எரிப்பதையும் அவர்கள் பதிவுசெய்துள்ளனர்.

செய்திசேகரித்துக்கொண்டிருந்த ஊடகத்தினரின் செல்பேசிகள் வன்முறை கும்பலால் பிடுங்கப்பட்டு, உடைத்தெறியப்பட்டன. சில காலிகள் கேமிராக்களையும் பிடுங்கி உடைத்துப்போட்டுள்ளனர். சிலர் மட்டும் கேமிராவில் உள்ள படங்களை மட்டும் அழித்துள்ளனர்.