ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில் குறிப்பிட்ட நாட்களில் சூர்ய கதிர்கள் சிவன் மேல் விழும் அதிசயம் எங்கு தெரியுமா?

சிவன் பார்வதி திருமணத்தின் போது பூமி பாரம் தாங்காமல் சற்று வடகிழக்கு நோக்கி சாய்ந்த போது அகத்தியரை தென் திசை சென்று சமன் செய்யுமாறு கூறினார் இறைவன்.


அகத்தியர் தென்திசை நோக்கி சென்றபோது வணங்கிய சிவாலயங்களில் எல்லாம் இறைவன் அகத்தீஸ்வரர் என்று அவர் பெயராலேயே வழங்கப்பட்டு, கோயிலும் அவர் பெயராலேயே அமைந்து வணங்கப்பட்டு வருகின்றது.

மனித ஆன்மாவில் இருக்கும் ஜோதி வடிவான இறைவன் திருவருளை யோகத்தாலும், தியானத்தாலும் பெருக்கி தலையின் மேல் பகுதி பின்பக்கம் வடபக்கம் என எங்கும் பரவச் செய்து அவ்வொளி எல்லா இடங்களிலும் பரவி நிலைத்து வளம் பெறச் செய்வது அகப்பூசையைச் சார்ந்த வழிபாடு. அகத்தியர் இதனை கொண்டு வழிபட்டதாக திருமூலர் குறிப்பிட்டுள்ளார். முக்தி எனப்படும் ஓமத் தீ, வேள்வித் தீ, யாகத் தீ ஆகிய தீக்களை வளர்த்து மந்திரம் ஓதி வழிபாடு செய்யும் போது இறைவன் ஒளி வடிவாய் வெளிப்படுவது புறப்பூசை வழிபாடாகும். இப்படி அகப்பூசை புறப்பூசை இரண்டிற்கும் வழிகாட்டியாக விளங்கிய அகத்தியர் வழிபட்ட திருத்தலங்கள் எண்ணற்று இருந்தாலும் அவற்றில் குறிப்பிடத்தக்க கோயில்களில் ஒன்று வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள விண்ணம் பள்ளி கோயிலாகும்.

விண்மணி என்பது சூரியனை குறிக்கும். பள்ளி என்பது ஊரை குறிக்கும். சூரியன் வழிபடுகின்ற தலம். விண்மணி பள்ளி என்பதே மருவி விண்ணம்பள்ளி என்று வழக்கத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட நாட்களில் சூரியனின் கதிர்கள் சிவலிங்கத்தின் மேல் சுமார் 20 நிமிடம் விழும் இந்த ஆண்டு வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் வரை காலை 6:30 மணியிலிருந்து 6:40 வரை சூரிய கதிர்கள் சிவலிங்கத்தின் மீது விழும் நிகழ்ச்சி நடைபெறும் என்று கோயில் நிர்வாகத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

சோழர் காலத்து கட்டடக் கலைச் சார்ந்த கோயில். முற்றிலும் சுற்று சுவர் எழுப்பப்பட்டு கிழக்குப் பார்த்த நுழைவாயில் வழியாகச் சென்றால் முதலில் தனி மண்டபத்துடன் கூடிய நந்தியம்பெருமான் சந்நதி. விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர் தனித்தனி சன்னதிகளில் அமைக்கப்பட்டுள்ளனர். கருங்கற்களால் கூரை வரை கட்டப்பட்டு செங்கற்களால் கட்டப்பட்ட ஏகதள விமானத்துடன் கூடிய கிழக்கு நோக்கிய கருவறையில் அருள்கிறார் மூலவர் அகஸ்தீஸ்வரர்.

கோயிலின் உள் பிரகாரத்தில் காசி லிங்கமும், 1008 லிங்கம் என்ற தனி லிங்கமும் புடைப்புச் சிற்பமாக மிகப் பழமையான மகாவிஷ்ணுவும், அகத்தியர், நால்வர் சந்நிதிகளும் இருக்கின்றன.

இக்கோயில் ஒரு சிறந்த பரிகாரத் தலம். அறுபதாம் ஆண்டு விழாவினை இக்கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வணங்கினால் நன்மை பயக்கும் என்பது நம்பிக்கை. பெண்கள் தங்களின் கணவன் மாறாத அன்பு கொண்டு நீண்ட நாள் இணைந்து வாழ கழுத்தில் கறையுடைய கண்டனான சிவபெருமானை அன்னை பார்வதி தேவியார் கடைப்பிடித்த விரதம் காரடையான் நோன்பு இருக்கும் காலத்தில் இத்திருத்தலத்தில் அம்மை அப்பருக்கு மகிழம் பூ மாலை சாத்தி வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து பூஜித்தால் எண்ணம் நிறைவேறும்.

புத்திர பாக்கியம் வேண்டுவோர் இக்கோயிலில் அம்மை அப்பருக்கு தொடர்ந்து 5 திங்கட் கிழமைகளில் மாலை வேளையில் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டால் புத்திர பாக்கியம் உண்டாகும். புதன்கிழமையில் புதன் ஓரையில் அம்மை அப்பருக்கு தாமரைப் பூவால் அலங்கரித்து விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி பெற்றோர் வழிபட அவர்களது குழந்தைகளின் கல்வி, எதிர்காலம் சிறப்புடன் அமையும்.