ஒரே நாளில் டிஸ்மிஸ்...! நடுத்தெருவுக்கு வந்த 176 குடும்பங்கள்! ஆனந்த விகடன் நிறுவனத்தில் அரங்கேறிய குரூர சம்பவம்!

ஆனந்தவிகடன் குழுமத்தில் பணியாற்றி வந்த 176 பேரை ஒரே நாளில் வேலையை விட்டு அனுப்பியுள்ளது அந்த நிறுவனம். இதன் மூலம் யாரையும் வேலையை விட்டு விரட்டப்போவதில்லை என்று கடந்த மாதம் அந்த நிறுவன தலைவர் சீனிவாசன் கொடுத்த வாக்குறுதி மீறப்பட்டுள்ளது.


நேற்றைய தினம் ஆனந்த விகடன் குழுமத்திலுள்ள தொழிலாளிகளை திடீரென அழைத்து நாளை முதல் உங்களில் 176 பேரை வீட்டுக்கு அனுப்புகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.  சுமார் 600 பேர் வேலை செய்கிற அந்த நிறுவனத்தில் இந்த முடிவுகளை எடுத்த சில பேரைத் தவிர, கடந்த 24 மணி நேரமாக ஒவ்வொரு குடும்பத்திலும் அது தங்கள் பெற்றோராக, தங்கள் பிள்ளையாக, தனது கணவராக அல்லது தனக்கு மருகமளாகவோ, மருமகனாகவோ இருக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டிருப்பார்கள்.

இது எத்தனை பெரிய கொடூரம். 176 பேர் என்று நிச்சயிக்கப்பட்ட பிறகு, வேறு யாருக்காகவாவது வந்துவிட வேண்டும் என்று மனிதத்தைச் சிதைக்கிற ஒரு சிந்தனைக்கு தூண்டும் இந்த முடிவை எவ்வித தயக்கமுமின்றி அந்த நிர்வாகம் எடுத்திருக்கிறது.   மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு இவர்கள். கடந்த மாதமோ அதற்கு முன்பாகவோ இந்த நிறுவனம் தொழிலாளிகளை அழைத்து உங்களில் யாரையும் வீட்டிற்கு அனுப்பப் போவதில்லை.

அதன் காரணமாகவே 30 சதவிகிதம் வரை சம்பளத்தை வெட்டுகிறோம் என்று உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்கள். இப்போது மூன்றில் ஒரு பகுதியை வெளியேற்றப் போகிறார்கள். இது திடீரென இறங்கிய இடி. யாரும் எதிர்பாராத ஒரு பெரும் திடீர் தாக்குதல். தங்களின் எந்த நேரடிக் காரணத்திற்காகவும் அவர்கள் வேலையை விட்டு அனுப்பப்படவில்லை. லாபம் குறைந்துவிடக்கூடாது என்பதற்காகவே அவர்கள் வேலையை விட்டு அனுப்பப்படுகிறார்கள். 

விகடன் நிறுவனத்தின் தலைவர் சொன்னதாக சமீபத்தில் ஒரு கருத்தை பார்க்க நேர்ந்தது. "உங்கள் தொழிலாளிகளை வைத்திருப்பதற்கு வாய்ப்பில்லை எனில் அவர்கள் எத்தனை நல்லவர்களாக இருந்தாலும் அவர்களைக் குறைப்பதற்கு இரண்டு முறை கூட யோசிக்காதீர்கள்". இதன் பொருள் உங்கள் லாபத்திற்கு பாதிப்பு வருமெனில் அவர் எத்தனை திறமையானவராக இருந்தாலும் சரி, எத்தனை நல்லவராக இருந்தாலும் அவரை வெளியே துரத்திவிடுங்கள், தாமதிக்காதீர்கள், இன்னொரு முறை கூட யோசிக்காதீர்கள் என்பதுதான்.

மனிதர்கள் முக்கிமல்ல, லாபம் மட்டும்தான் முக்கியம் என்பதுதான். ஒப்பீட்டளவில் நிரந்தரமான வேலை ஆனந்த விகடனில் பணிபுரிவது என்று ஊடகவியலாளர்களால் நம்பப்பட்டது. ஆனால், அந்த நிறுவனமே இப்படி செய்கிறது. மற்ற நிறுவனங்கள் இதையெல்லாம் செய்யாது என்று நம்புவதற்கு எந்தவிதமான தர்க்கமும் இடமளிக்கவில்லை. 

நன்றி: கே.கனகராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினர். CPIM