அதிமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக! விஜயகாந்த் கட்சிக்கு 4 தொகுதிகள் மட்டும் தான்!

நீண்ட இழுபறிக்கு பிறகு விஜயகாந்தின் தேமுதிக அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது.


சென்னை கிரவுண்பிளாசா ஓட்டலில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனை ஏற்று விஜயகாந்த் கையெழுத்திட்டுள்ளார்.

ஓரிரு நாளில் கூட்டணியை இறுதி செய்ய உள்ளதாக பிரேமலதா நேற்று முன்தினம் கூறியிருந்தார். அதன்படி திரைமறைவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நேற்றே உடன்பாடு எட்டப்பட்டது.

இந்த தகவலை நேற்றே டைம்ஸ் தமிழ் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுவிட்டது என்றும் ஞாயிறன்று தொகுதி உடன்பாடு கையெழுத்தாகிறது என்றும் கூறியிருந்தது. அதன்படி இன்று கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதற்காக விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து மாலை ஆறு மணி அளவில் புறப்பட்டார். பின்னர் கிரவுண் பிளாசா ஓட்டலுக்கு சென்று தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளார்.

அதன்படி நான்கு தொகுதிகள் மட்டுமே விஜயகாந்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்படவில்லை. இடைத்தேர்தல் நடைபெறும் சட்டப்பேரவை தொகுதிகளிலும் தேமுதிகவுக்கு ஒன்று கூட இல்லை.

அதே சமயம் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 எம்பி சீட்டுகளும், ஒரு மாநிலங்களவை சீட்டும் கொடுக்கப்பட்டது. இதே போல் பாஜகவிற்கு ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் தமிழகத்தின் 3வது பெரிய கட்சி என்று கூறிக் கொள்ளும் தேமுதிக 4 தொகுதிகளை ஏற்றுக் கொண்டுள்ளது.

இதன் மூலம் தேமுதிக பா.ஜ.கவை விட குறைவான வாக்கு வங்கி கொண்ட கட்சி என்று பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.