சிகிச்சைக்கு இரவோடு இரவாக மீண்டும் அமெரிக்கா பயணம்! கேப்டனுக்கு என்ன தான் ஆச்சு?

கேப்டன் விஜயகாந்த்


    இரவோடு இரவாக கேப்டன் விஜயகாந்த் மீண்டும் அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்டுள்ளதால் அவரது உடல் நிலை குறித்து தொண்டர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

   தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கடந்த ஓராண்டாகவே உடல் நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். கட்சி வேலைகளை அவரது மனைவி பிரேமலதா கவனித்து வருகிறார். கேப்டனின் அரசியல் வாரிசாக அவரது மூத்த மகன் விஜயபிரபாகரனும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறது. ஏதேனும் முக்கியமான நிகழ்ச்சி என்றால் மட்டுமே கேப்டன் தலைகாட்டி வந்தார்.

   இந்த நிலையில் நேற்று இரவு திடீரென கேப்டன் தனது மனைவி பிரேமலதாவுடன் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அவர் விமானநிலையம் செல்லும் வரை இந்த தகவல் ரகசியமாக இருந்தது. கேப்டன் விமானத்தில் ஏறிய பிறகு தான் அவர் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளதாக தே.மு.தி.க தரப்பில் இருந்து அறிக்கை வெளியானது.

   ஏற்கனவே கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் கேப்டன் அமெரிக்காவில் சிகிச்சைக்கு சென்று திரும்பி வந்தார். மீண்டும் அமெரிக்காவிற்கு கேப்டன் சிகிச்சைக்கு செல்ல வேண்டி உள்ளதுஎன்று தே.மு.தி.க உயர்மட்ட நிர்வாகிகள் கூறி வந்தனர். இதனிடையே கேப்டன் திடீரென தற்போது அமெரிக்கா புறப்படவில்லை என்றும் இந்த பயணம்ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்றும் என்றும் தெரியவந்துள்ளது.

   கேப்டனுக்கு சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நாடு திரும்பினார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை கேப்டனுக்கு முழு அளவிலான பயனை அளிக்கவில்லை. இதனால் மீண்டும் சிறுநீரகத்தில் கேப்டனுக்கு பிரச்சனை ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

   இதனால் தான் அமெரிக்கா சென்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கேப்டன் சிகிச்சை பெற்றார். அப்போதே அவருக்கு அங்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது.இதனை தொடர்ந்து தமிழகத்தில் தே.மு.தி.க தொண்டர்கள் கோவில் கோவிலாக சென்று கேப்டனுக்கு சிறப்பு பூஜைகள் செய்ய ஆரம்பித்தனர். ஆனால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமலேயே கேப்டன் சென்னை திரும்பினார்.

   இது குறித்து விசாரித்த போது தான் கேப்டனுக்கு செய்யப்படஉள்ளது மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சை என்பது தெரியவந்துள்ளது. அந்த அறுவை சிகிச்சைக்கு தயாராகவே கேப்டனுக்கு மூன்று மாதங்கள் தேவை என்று கூறப்படுகிறது. இந்த மூன்று மாதங்களும் சென்னையில் இருந்தபடி அறுவை சிகிச்சைக்கு தயாராகும் வகையில் உடற் பயிற்சிகள், மருந்துகள் உள்ளிட்டவற்றை கேப்டன் எடுத்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

   தற்போது கேப்டன் அறுவை சிகிச்சைக்கு தயாராகிவிட்டதாக இங்குள்ள மருத்துவர்கள் சான்றிதழ் கொடுத்த பிறகு அமெரிக்க மருத்துவமனை கேப்டனுக்கு நேரம் ஒதுக்கியுள்ளது. இதனை தொடர்ந்தே கேப்டன் சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார. அறுவை சிகிச்சை முடிந்து சென்னை திரும்ப எப்படியும் இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகும் என்கிறார்கள் தே.மு.தி.க தரப்பில்.