கொரோனாவால் உயிரிழப்போர் உடல்களை என் கல்லூரியில் அடக்கம் செய்யுங்கள்..! நெகிழ வைத்த கேப்டனின் மனிதாபிமானம்!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடல்களை அடக்கம் செய்ய தனது ஆண்டாள் அழகர் கல்லூரியில் ஒரு பகுதியை ஒதுக்கித் தருவதாக கேப்டன் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


சென்னையில் சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவர் உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய முயன்றபோது அந்த இடத்தில் உள்ள பொதுமக்கள் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சம்பவம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் இதுதொடர்பாக தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளரான கேப்டன் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர் ஒருவரின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த செய்தியைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.

மக்களுக்கு சேவை செய்யும் மருத்துவத்துறையை சேர்ந்த ஒருவருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மனிதனின் நிலையை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். கால்நடைகள் இறந்தாலே மனிதாபிமானத்துடன்  முறையாக அடக்கம் செய்யும்  மனப்பான்மை கொண்ட தமிழக மக்கள் தற்போது மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கின்றது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்வதால் எந்தத் தொற்றும் ஏற்படாது என உலக சுகாதார மையமும் தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. ஆகையால் மக்கள் தவறாக புரிந்து கொண்டு ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்குவதும் ஆம்புலன்ஸ் வாகனத்தை அடிப்பதுமான செயல்கள் கண்டனத்திற்குரியது.

ஆகவே மக்கள் அனைவரும் மனிதாபிமானத்தோடு சிந்தித்து இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்றும் கேப்டன் விஜயகாந்த் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட உயிரிழந்தவரின் உடல்களை அடக்கம் செய்ய தனது ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியின் ஒரு பகுதியை எடுத்துக்கொள்ளலாம் எனவும் விஜயகாந்த் அந்த அறிக்கையில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.