விஷால் மீது செம கடுப்பு! செய்தியாளரிடம் சண்டைக்கு சென்ற விஜய்சேதுபதி!

விஜய் சேதுபதி


  சீதக்காதி படம் வெளியீட்டு விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக எழுந்த புகாரால் செம டென்சனில் இருந்த விஜய்சேதுபதி செய்தியாளர் ஒருவரிடம் சண்டைக்கு சென்ற நிகழ்வு அரங்கேறியுள்ளது.

   நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீதக்காதி திரைப்படம் டிசம்பர் 21ந் தேதி வெளியாகும் என்று கடந்த மாதமே அறிவிப்பு வெளியானது. ஆனால் டிசம்பர் 21ந் தேதிக்கு பிறகு பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை என்பதால் அன்றைய தினம் திரைப்படத்தை வெளியிட்டால் வசூலை அள்ளிவிடலாம் என மேலும் சில திரைப்பட தயாரிப்பாளர்களும் அதே தினம் தங்கள் திரைப்படங்களை வெளியிட முடிவு செய்தனர்.

   ஆனால் திரைப்படங்களை குறிப்பிட்ட தேதியில் வெளியிட தயாரிப்பாளர் சங்கத்தின் அனுமதியை பெற வேண்டும். அந்த வகையில் 21ந் தேதி சீதக்காதி படத் வெளியிட விஜய்சேதுபதி தரப்பும், சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தை வெளியிட நடிகர் விஷ்ணு விஷால் தரப்பும் தயாரிப்பாளர் சங்கத்தின் அனுமதியை பெற்றிருந்தனர். இந்த நிலையில் நடிகர் தனுஷ் தனது மாரி 2 படத்தை 21ந் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்தார்.

   காலா படத்தை விடுமுறை தினத்தில் வெளியிடாமல் வொர்க்கிங் டேயில் வெளியிட்டதால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் எனவே மாரி 2 படத்தை விடுமுறையை கணக்கிட்டு 21ந் தேதி தான் வெளியிடுவேன் என்றும் தனுஷ் பிடிவாதம் பிடித்தார். இதே போன்று நடிகர் ஜெயம் ரவியின் அடங்கமறு படமும் 21ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

   ஒரே நேரத்தில் மாரி 2, அடங்கமறு உள்ளிட்ட பல்வேறு படங்கள் வெளியாவதால் நடிகர் விஜய்சேதுபதியின் சீதக்காதி படத்திற்கு பெரிய அளவில் திரையரங்குகள் கிடைக்கவில்லை. இதனால் படம் 21ந் தேதி வெளியானாலும் பெரிய அளவில் வசூல் இருக்காது என்று சீதக்காதி தயாரிப்பாளர் கருதுகிறார். வேறு வழியின்றி படத்தை 20ந் தேதியே வெளியிடலாம் என்று சீதக்காதி தயாரிப்பாளர் முயற்சி மேற்கொண்டு வருகிறார். ஆனால் அதிலும் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது-

   இந்த விவகாரத்தில் உதவ வேண்டிய விஷால் நழுவிச் சென்றதால் அவர் மீது நடிகர் விஜய் சேதுபதி கடும் கோபத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் சென்னையில் நடிகர் சேரனின் படத்துவக்க விழாவில் விஜய் சேதுபதி கலந்து கொண்டார். அவரிடம் சீதக்காதி படம் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என்று வெளியான தகவல் குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரம் அடைந்த விஜய்சேதுபதி, மைக்குகளை கீழே இறக்கி பிரச்சனை செய்ய வேண்டும் என்றே கேள்வி கேட்கிறீர்களா என்று சண்டைக்கு சென்றார்.

   பின்னர் நிதானத்திற்கு வந்து தயாரிப்பாளர் சங்கத்தில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாகவும் அதனை ஒரே நபரால் தீர்க்க முடியாது என்றும் நடிகர் விஷாலை மறைமுகமாக விமர்சித்துவிட்டு சென்றார்.