ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகத்தை மீறி வெற்றி - சி.பி.எம். சொல்கிறது!

நடந்துமுடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியினர் அதிகாரதுஷ்பிரயோகத்தில் ஈடுபட்டனர்;


அதையும் மீறி திமுக அணி வெற்றிபெற்றுள்ளது என்று மார்க்சிய கம்யூ. கட்சி கருத்துத் தெரிவித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் திமுக அணியில் இடம்பெற்ற மார்க்சிய கம்யூ. கட்சி, 515 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவி இடங்களில், 22 இடங்களிலும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவியிடங்களில் 257 இடங்களிலும் போட்டியிட்டது.

அதில், இதுவரை கிடைக்கப்பெற்ற முடிவுகளின்படி, 31 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவியிடங்களிலும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 2 இடங்களிலும் மார்க்சிய கம்யூ. கட்சி வெற்றிபெற்றுள்ளது.  தேர்தல் முடிவுகளைப் பற்றி அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 

”ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் தில்லுமுல்லுகளையெல்லாம் முறிடியத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து பெருவாரியாக வெற்றி பெறச் செய்ததன் மூலம் ஆளுங்கட்சிக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர் என சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும், “ ஊரக, உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட்சி கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும் மற்றும் திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களுக்கும் வாக்களித்து வெற்றி பெறச் செய்திட்ட தமிழக வாக்காளப் பெருமக்களுக்கும், இத்தேர்தலில் அயராது தேர்தல் பணியாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகளுக்கும், ஊழியர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடன் மக்களுக்கு அயராது பணியாற்றுவார்கள் என்பதையும்; உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.” என்றும் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.