வேலூரில் தேர்தல் ரத்து! அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் குடியரசுத் தலைவர்!

வேலூரில் தேர்தல் ரத்து என்று குடியரசுத் தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.


தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியிலும் சேர்த்து 40 தொகுதிகளுக்கும் வரும் வியாழன் என்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின்போது கட்டு கட்டாக பெட்டி பெட்டியாக சுமார் 15 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த 15 கோடி ரூபாய் பணமும் வாக்காளர்களுக்கு வினியோகிக்க வைக்கப்பட்டு இருந்த பணம் என்றும் அந்த பணத்திற்கும் திமுக வேட்பாளர் ஆனந்த் இருக்கும் தொடர்பு இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியது. இதனடிப்படையில் வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வேலூர் தொகுதியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள பணம் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்ட பணம் என்பது உறுதியாகியுள்ளதாகவும் ஏராளமான பணம் ஏற்கனவே வினியோகம் செய்யப்பட்டு விட்டதாகவும் தேர்தல் ஆணையத்திற்கு தமிழக தேர்தல் அதிகாரி அறிக்கை அளித்துள்ளார். இதன் அடிப்படையில் வேலூரில் தேர்தலை ரத்து செய்யுமாறு குடியரசுத் தலைவருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தது.

இந்த பரிந்துரையை ஏற்று வேலூர் தொகுதியில் மக்களவை தேர்தலை ரத்து செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். வேலூர் தொகுதிக்கு உட்பட்ட எட்டு சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப் பதிவு கிடையாது என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.