கொரோனா ஊரடங்கு! டீச்சர்களுக்கு பாதி சம்பளம் தானாம்..! அதிர்ச்சி தரும் அறிவிப்புகள்!

வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்ந்த கல்வி நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு இந்த மார்ச் மாதம் முதல் 50 சதவீதம் சம்பளம் கொடுக்கப்படும் என்று அந்த அறக்கட்டளையின் chairman கூறியுள்ளார்.


தற்போது உலகையே ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களை பலி வாங்கியுள்ளது. தமிழ் நாட்டிலும் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு மெல்ல மெல்ல நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இதனால் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மத்திய மற்றும் மாநில அரசுகள் நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனால் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் அரசு உத்தரவின்படி இயங்காமல் உள்ளது.

இந்நிலையில் வேலம்மாள் கல்வி அறக்கட்டளையில் இருந்து ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பில் நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் காரணமாக நமது வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்ந்த கல்வி குழுமங்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

இதனால் வேலம்மாள் கல்வி குழுமங்களில் வேலை செய்து வரும் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த மார்ச் மாதத்திலிருந்து 50% சம்பளம் அளிக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள 50% சம்பள பணம் மொத்தமாகவோ அல்லது தவனையாகவோ நெருக்கடிக் காலம் முடிந்த பின்னர் ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வேலம்மாள் மட்டும் அல்லாமல் சென்னையில் உள்ள பிரபலமான பல்வேறு கல்வி நிறுவனங்களும் இதே பாணியில் பாதி சம்பளம் தான் தற்போது கொடுக்க முடியும் என்று அறிவித்துள்ளன.