கடவுள் இல்லை என்று சொல்பவர்களே இந்த கோவிலுக்குள் வந்தால் கதி கலங்கி போவார்கள் - தமிழகத்தில் ஒரு ஆன்மீக மர்மம்.!

திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் என்ற இடத்தில் உள்ளது அருள்மிகு தங்காதலி வாசீஸ்வரர். மிக மிக பழமையான கோவில்.


இந்த கோவில் வரலாறை படித்தால் ஆச்சர்யம் காத்திருக்கிறது. இக்கோவில் ஆதிசங்கரர் கையால் கல்லில் வரைந்த ஸ்ரீ சக்கரம் உள்ளது. இச்சக்கரத்தை வரைந்த பின்னரே இக்கோவில் அடிக்கல் நாட்டப்பட்டதாம். தட்சனின் மகளாய் பிறந்த பார்வதி தேவி,திருமணம் முடிக்க எண்ணி சிவபெருமானை வேண்டி தவம் செய்த இடமே இக்கோவில்.

இக்கோவில் 5000 வருட பழமையான மூங்கில் உள்ளது. மூங்கிலின் உள்ளே தான் சிவன் சுயம்புவாக உருவானார். பின்பொரு காலத்தில் இத்தலம் மூங்கில் காடாக இருந்தது. பசுக்கூட்டத்தில் ஒரு பசு மட்டும் குறிப்பிட்ட இடத்தில் நாள் தோறும் பால் சொரிந்தது. இதனைக் கண்ட இடையன் மன்னனிடம் கூற, மன்னன் அவ்விடத்தை தோண்டிப்பார்க்க ஆணையிட்டான். உடனே வேடுவர்களும் வாசி என்னும் கருவியால் அவ்விடத்தை தோண்டிப் பார்க்க அங்கே இலிங்கம் இருப்பதைக் கண்டனர். மன்னனும் ஒன்றுமுணராது சென்றுவிட்டான்.

மறுநாள் மன்னனின் எதிரிகள் அவனை பழி தீர்ப்பதற்காக கொடிய விஷம் கொண்ட பாம்பு ஒன்றை குடத்தில் இட்டு அவனிடம் கொடுத்து விட்டனர். மன்னன் குடத்தை திறந்து பார்ப்பதற்கு முன்பு அங்கு வந்த ஒரு பாம்பாட்டி குடத்தில் இருந்த பாம்பை பிடித்துவிட்டு ஏதும் சொல்லாமல் சென்றுவிட்டார். அன்றிரவில் தானே பாம்பாட்டியாக வந்ததையும், மூங்கில் காட்டிற்குள் சுயம்புவாக எழுந்தருளியுள்ளதையும் மன்னனுக்கு உணர்த்தினார் சிவன், கனவில் தோன்றிய இறைவன் அவ்விடத்தில் தனக்கொரு ஆலயம் எழுப்புமாறு பணித்தார். அதன்பின் மன்னன் இத்தலத்தில் கோயில் எழுப்பினான்.

மன்னனும் அவ்வாறே செய்தான். வாசி என்னும் கருவியால் வெட்டுப்பட்டதால் இறைவன் வாசீஸ்வரர் எனப்படுகிறார். பாசு என்பது மூங்கிலைக் குறிக்கும். இவ்விடம் பண்டு மூங்கில் மரமாக இருந்த படியால் திருப்பாசூர் என அழைக்கப்படுகிறது.

தட்சனின் யாகத்திற்கு தன்னை மதியாது சென்ற பார்வதி தேவியை பெண்ணாக பூமியில் பிறக்குமாறு சபித்த சிவபெருமான் திருப்பாசூர் தலத்தில் தங்காதலியே என அன்போடு அழைத்ததால், இறைவி இங்கு தங்காதலி என பெயர் பெற்றாள். இவ்வூரும் தங்காதலிபுரம் என அழைக்கப்படுகிறது.

மது, கைடபர் எனும் இரு அசுரர்கள் பிரம்மாவின் வேதத்தை கடலுக்கு அடியில் மறைத்து வைத்து விட்டனர். இதனால் பிரம்மாவால் படைப்புத் தொழிலைசெய்யமுடியவில்லை. எனவே, மகாவிஷ்ணு மத்ஸ்ய (மீன்) அவதாரம் எடுத்துச் சென்று அவர்களை அழித்து வேதத்தை மீட்டு வந்தார். இதனால் அவரை தோஷம் பிடித்தது. இத்தோஷம் விலக சிவனிடம் வேண்டினார். அவர் பூலோகத்தில் இத்தலத்தை சுட்டிக்காட்டி தன்னை வழிபட்டுவர தோஷம் நீங்கும் என்றார். அதன்படி மகாவிஷ்ணு இங்கு வந்தார். இங்கிருந்த தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டு தோஷம் நீங்கப்பெற்றார். சிவனும் சுயம்புவாக எழுந்தருளினார்.

தாழம்பூ பூஜை: தனது தலை முடியைக் கண்டதாக பொய் சொன்ன (பிரம்மனுக்காக பொய் சொன்னதால்) தாழம்பூவை பூஜைகளில் இருந்து ஒதுக்கி வைத்தார் சிவன். தாழம்பூ சிவனிடம் தன்னை மன்னித்து பரிகாரம் வேண்டவே சிவராத்திரி நாளில் மட்டும் தனது பூஜைக்கு பயன்படும்படி சிவன் வரம் கொடுத்தாராம். இதன் அடிப்படையில் இக்கோயிலில் சிவராத்திரி தினத்தன்று இரவு ஒரு கால பூஜையில் மட்டும் தாழம்பூவை சிவனின் உச்சியில் வைத்து பூஜை செய்கின்றனர்.

விநாயகர் சபை : விஷ்ணு அசுரர்களை அழித்த தோஷத்தால் தன்னிடமிருந்த 16 செல்வங்களில் 11 செல்வங்களை இழந்தாராம். அந்த செல்வங்களை பெறுவதற்காக சிவனை வேண்டினார். அவரது ஆலோசனையின்படி இத்தலத்தில் 11 விநாயகர்களை பிரதிஷ்டை செய்து வணங்கி இழந்த செல்வங்களை பெற்றார் என்றொரு வரலாறு உண்டு. இதனை உணர்த்தும் விதமாக இக்கோயிலில் 11 விநாயகர்கள் ஒரே இடத்தில் சிறு மண்டபத்தின் கீழ் காட்சி தருகின்றனர். இதனை, "விநாயகர் சபை' என்கின்றனர். அருகிலேயே கேது பகவான் தனியே இருக்கிறார்.

சொர்ண காளி : இப்பகுதியை ஆட்சி செய்து வந்த குறும்பன் எனும் சிற்றரசன் ஒருவன் மன்னனுக்கு சரியாக வரி கட்டாமல் இருந்தான். எனவே அவனுடன் போரிட்டு வரியை வாங்க சோழ மன்னன் ஒருவன் குறும்பன் மீது படையெடுத்தான். காளி பக்தனான குறும்பன் அவளை ஏவி விட்டு சோழ படைகளை விரட்டியடித்தான். சோழ மன்னன் சிவனிடம் தனக்கு உதவும்படி வேண்டினான். அவனுக்காக சிவன் காளியை அடக்க நந்தியை அனுப்பி வைத்தார்.

பூலோகம் வந்த நந்தி காளியுடன் போரிட்டு அதனை வெற்றி பெற்றது. மேலும் காளியின் இரண்டு கால்களிலும் பொன் விலங்கை பூட்டியும் அதனைக் கட்டுப்படுத்தினார். நந்தியால் அடக்கப்பட்ட சொர்ணகாளி இக்கோயில் பிரகாரத்தில் நான்கு கைகளுடன் தனியே நின்ற கோலத்தில் இருக்கிறாள். இவளது கால்களில் விலங்கு போடப்பட்டிருக்கிறது. பவுர்ணமி தோறும் மாலை வேளைகளில் இவளுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

தெற்கு திசையில் 3 நிலை இராஜகோபுரமும், கிழக்கு திசையில் ஒரு முகப்பு வாயிலும் கொண்டு இவ்வாலயம் விளங்குகிறது. இவ்வாலயத்தில் 2 பிரகாரங்கள் உள்ளன. முதல் வெளிப் பிரகாரம் நல்ல அகலமான வெளிச்சுற்றாகும். வெளிப் பிரகாரம் சுற்றி வரும்போது கிழக்குச் சுற்றில் பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. இச்சுற்றில் சொர்ணகாளிக்கு தனி சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இச்சுற்றில் தலவிருட்கம் மூங்கில் ஓங்கி வளர்ந்துள்ளது. தெற்கு வெளிச் சுற்றிலிருந்து உட்பிராகாரம் செல்ல வழி உள்ளது.

2வது பிரகாரத்தில் சுவாமி, அம்பாள் மற்றும் சுப்பிரமணியர் சந்நிதிகள் இருக்கின்றன. மூலவர் வாசீஸ்வரர் சந்நிதியும், இறைவி தங்காதளி அம்மன் சந்நிதியும் தனித்தனி விமானங்களுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன.

இறைவன் கருவறை விமானம் கஜப்பிரஷ்ட அமைப்பைக் கொண்டது. அம்மன் சந்நிதி சிவபெருமான் சந்நிதியின் வலதுபுறம் அமைந்துள்ளது. இவ்வாறு சுவாமி சந்நிதியின் வலதுபுறம் அம்மன் சந்நிதி உள்ள சிவஸ்தலங்களுக்கு ஆக்க சக்தி அதிகம் உண்டு என்று சாத்திரங்கள் கூறுகின்றன. இங்குள்ள ஈஸ்வரர் ஒரு சுயம்பு லிங்கமாகும். இந்த சிவலிங்கத்தை யாரும் தீண்டுவதில்லை. அலங்காரங்கள் கூட பாவனையாகத்தான் நடைபெறுகிறது. சுவாமி தீண்டாத் திருமேனி என்று அழைக்கப்படுகிறார்.

சுவாமி சந்நிதியின் இரு பக்கமும் துவாரபாலகர்கள் சிலைகள் கருத்தைக் கவரும் வகையில் உள்ளன. மூலவர் கருவறையில் நுழைவாயில் இடதுபுறம் ஏகாதச விநாயகர் சபை இருக்கிறது. இதில் சிறிதும் பெரிதுமாக 11 விநாயக திரு உருவச்சிலைகள் காண்போர் கருத்தை கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ளன. முன்புறம் மூன்று, பின்புறம் மூன்று என ஆறு விநாயகர்களும், இவர்களுக்கு இடப்புறம் ஐந்து விநாயகர்களும் இருக்கின்றனர்.

அருகில் கேதுவும் இருக்கிறார். கருவறை சுற்றுச் சுவர்களில் கோஷ்ட மூர்த்தங்களாக தட்சினாமூர்த்தி, அண்ணாமலையார், துர்க்கை, பிரம்மா ஆகியோர் உள்ளனர். உட்பிரகாரத்தில் தேவார மூவரின் உருவச்சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. தடைபட்ட திருமணங்கள் நடக்கவும், தோஷங்கள் நீங்கவும் பிரார்த்திக்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியவுடன் விநாயகர் சபையில் 11, ஸ்ரீசக்கரத்தில் 5 நெய் தீபங்கள் ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.