குமரி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார்! பொன்னாருக்கு மரண பயத்தை காட்டிய ராகுல்!

கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளராக யாரும் எதிர்பாராத வகையில் வசந்தகுமாருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இருந்து போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டது. தமிழகம் புதுச்சேரியில் காங்கிரஸ் 10 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் சிவகங்கை தவிர்த்து மற்ற 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ராகுல் காந்தி வெளியிட்டு இருந்தார்.

அதன்படி கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளராக வசந்தகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். வசந்த் அண்ட் கோ ஓனரான வசந்தகுமார் கடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு இரண்டாமிடம் பிடித்தார்.

கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து களம் இறங்கிய நிலையில் கன்னியாகுமரியில் மட்டும்தான் இரண்டாவது இடத்தை பிடித்தது. இதற்கு காரணம் கன்னியாகுமரி தொகுதியில் வசந்தகுமாருக்கு இருக்கும் தனி செல்வாக்கு தான்.

இந்த நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் வசந்தகுமாருக்கு காங்கிரஸின் கொடுத்தது. அதில் வெற்றிபெற்று தற்போது வசந்தகுமார் எம்எல்ஏவாக உள்ளார்.

இதனால் நாடாளுமன்ற தேர்தலில் வசந்தகுமாருக்கு வாய்ப்பு கிடைக்காது என்றே காங்கிரஸ் கட்சிக்காரர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். இதேபோல் பொன்ராதாகிருஷ்ணன் கூட வசந்தகுமார் கன்னியாகுமரி தொகுதியில் மீண்டும் போட்டியிட மாட்டார் என்கிற துணிச்சலில் தேர்தல் வேலையில் அலட்சியமாகவே ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக கன்னியாகுமரி தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் வசந்தகுமாரை அறிவித்து அதிரடி கிளப்பியுள்ளார் ராகுல் காந்தி. கடந்த முறை தனித்து களம் இறங்கிய இரண்டாவது இடம் பிடித்த வசந்தகுமார் தற்போது திமுக கூட்டணியில் போட்டியிட்ட உள்ளதால் பொன் ராதாகிருஷ்ணனுக்கு கடும் சவாலாக இருப்பார் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இதேபோல் அதிமுகவை பொறுத்தவரை கடந்த முறை கன்னியாகுமரி தொகுதியில் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டு டெபாசிட்டை இழந்தது. எனவே கூட்டணி பலம் என்று பார்க்கும்போது கன்னியாகுமரியில் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாருக்கு தான் வாய்ப்பு அதிகம் என்று சொல்கிறார்கள்.

யாரும் எதிர்பாராத வகையில் வசந்தகுமாரை வேட்பாளராக அறிவித்து பொன் ராதாகிருஷ்ணனுக்கு தற்போதைய தோல்வி பயத்தை ராகுல் காந்தி காட்டியுள்ளதாக காங்கிரஸ் கட்சிக்காரர்கள் புல்லரித்துப்போய் பேசிக் கொண்டிருக்கின்றனர்.