இந்த புத்தாண்டு உங்களுக்கு எப்படி? அதிர்ஷ்ட மந்திரம் இதோ!

இந்த முறை புத்தாண்டு கூடுதல் விசேஷத்துடன் பிறக்க உள்ளது என்கிறார்கள் ஜோதிட சாஸ்திர வல்லுநர்கள்.


2020 ஆம் ஆண்டுக்கான ஆங்கில புத்தாண்டு வ்யதிபாத யோகம் என்ற சுபயோக நன்னாளில் மலர்கிறது.. அது என்ன வ்யதிபாத யோகம்? மகா வ்யத்பாத புண்ணிய காலம் என்ற நாளைப் பற்றி ஜோதிட நூல்கள் விரிவாகக் கூறுகின்றன. லக்ஷ்மி குபேரன் செல்வம் பெற்ற தினம். மார்கழியில் வரும் மகா வ்யதிபாத புண்ணிய காலத்தில் அதிகாலை எழுந்து புனித நீராடி சிவாலயங்களுக்குச் சென்று சிவலிங்கத் திருமேனிக்கு நடத்தப்படுகின்ற அபிஷேக ஆராதனைகளை காணவேண்டும் என்பது சாஸ்திர விதி.

வ்யதிபாத யோக காலம் சிவ வழிபாட்டுக்கு உகந்த காலமாக ஆகம விளக்கம் தரப்பட்டுள்ளது. இந்த யோக காலத்தின் தன்மையை அறிந்த மகாலட்சுமி தேவியும் குபேரனும் சிவபெருமானை லிங்கத் திருமேனி செய்து அபிஷேக ஆராதனையோடு வழிபட்டனர். அங்கே பரமேஸ்வரன் ஐஸ்வரிய சிவனாக வடிவமெடுத்து செல்வங்களை அளித்து ஆசிர்வாதம் செய்தார்.

அட்சய திருதியை திருநாளைப் பெண்கள் நகை வாங்கும் நாள் என்று கொண்டாடுவர். அதற்கும் ஒருபடி மேன்மையான சக்தி வாய்ந்த யோக நாளாக வருவது வ்யதிபாத யோகத் திருநாள். ஒவ்வொரு மாதமும் இந்த யோக நாள் வருகிறது. அந்த நாளில் பரமன் எழுந்தருளும் கோலமே மிக வித்தியாசமானதாக இருக்கும்.

ஜோதிட சாஸ்திரத்தில் திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்னும் பஞ்ச அங்கங்களில் நான்காவதாக வருவது தான் யோகம். இவை 27 வகைப்படும். ஒவ்வொரு யோகத்திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அவற்றில் பதினேழாவது யோகம்தான் வ்யதிபாதம் யோகம். இந்த நாளில்தான் 2020 புத்தாண்டு பிறக்கிறது.

இந்த மார்கழி மாதத்தில் சுபயோகங்களை அள்ளித் தரும் தனுர் வ்யதிபாத தினத்தில்தான் புத்தாண்டு வருகிறது. வ்யதிபாதம் யோகம் என்ற சுப காலத்துக்கான அதிதேவதை சிவப்பு நிறத்துடன் எட்டு கண்களைக் கொண்டு நான்கு பக்கங்களிலும் ஒளி வீசுகின்ற சக்தியோடு வேதங்களைச் சொல்லிக் கொடுக்கின்ற குரு வடிவினராகத் தோன்றுகிறார்.

இந்த யோகக் காலத்தில் வ்யதிபாத அதிதேவதையை வழிபட்டால் பொன் பொருள் சேர்க்கை பெறலாம். செல்வங்கள், யோகங்களை அதிகம் பெற சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்ளலாம். புனித தீர்த்த யாத்திரை செல்லலாம். தங்கள் குருநாதரைக் குடும்பத்துடன் சென்று வணங்கி வாழ்த்துப் பெறலாம். விஷப் பிரயோகங்கள் செய்யப்பட்டிருந்தால் அதை முற்றிலுமாக முறியடிக்க மருத்துவமும், தெய்வ வழிபாடும் செய்யலாம்.

அதிர்ஷ்டமான இந்த மகாயோக தினத்தில் வருகிற புத்தாண்டு பிறக்க இருப்பதால் அன்றைய தினம் கோவிலுக்குச் சென்று இறைவழிபாடு செய்து வருவது மிகச் சிறந்த பலனை கொடுக்கும். வ்யதிபாத யோகத்துக்கான மூல மந்திரம் மற்றும் தியானம்: ஓம் ஸ்வேத கல்யாண ரூபாய அஷ்ட நேத்ர காந்தாய

யோகம் என்ற சொல்லுக்கு சேர்க்கை என்று பொருள். ஒரு மனிதனுக்கு சேர வேண்டிய நன்மைகளைச் சேர்த்துக் கொடுக்கவே யோகம் ஏற்பட்டது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த வகை மகா யோகங்கள் ஒன்பது கோள்களின் அசைவுகளால் தான் ஏற்படுகிறது. ஜனன காலத்தில் உறுதி செய்யப்பட்டு ஒருவரது வாழும் காலத்தை இயக்கச் செய்கிறது.

27 யோகங்களில் பிறந்தவர்களுக்கு அவரவர்க்கு அமைந்த கிரஹ நிலைப்படி நில யோகம், சிரிக் யோகம், கத யோகம், வஜ்ர யோகம், யவ யோகம், கமல யோகம், சத்ர யோகம், சமுத்திர யோகம் ஆகியவற்றைப் பெற்றிருப்பார்கள் என்று பிருஹத் ஜாதகம் கூறுகிறது.

குருவின் பார்வை போல ஒரு அதிர்ஷ்ட தேவதை வடிவில் அமர்வதுதான் யோகம் என்கிற நல்லகாலம். அந்த யோக தேவதையை வணங்கி எதையும் செய்யத் தொடங்கிவிட்டால் நல்ல காலம் பிறந்து செல்வச் சேர்க்கையும் பலவித வாழ்க்கை நலன்களும் வந்து சேரும்.