சாதிய மனநோயாளி என மருத்துவர் ராமதாசை அழைப்பது என்ன தவறு..? ஆவேச வன்னி அரசு.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுசெயலாளராக இருக்கும் வன்னி அரசு, மாணவர் தற்கொலையில் அரசியல் தேடும் ராமதாஸ்க்கு கண்டனம் தெரிவித்து சூடாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.


நீட் என்னும் அரச பயங்கரவாதத்தால் அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்துள்ள எலந்தங்குழியை சார்ந்த விக்னேஷ் என்னும் மாணவர் கடந்த 9.9.2020 அன்று கொல்லப்பட்டார். தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மருத்துவம் படிக்க கூடாது என்னும் சனாதனத்தை நடைமுறைப்படுத்தவே பாசிச பாஜக இந்த நீட்டை தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. 

நாடு முழுக்க போராட்டங்கள் வெடித்தன. தமிழக சட்டப்பேரவையிலும் நீட்டுக்கு எதிராக தீர்மானம் இயற்றி இந்திய ஒன்றிய அரசுக்கும் அனுப்பி வைத்தது. அந்த தீர்மானம் குறித்து எந்த நடவடிக்கையும் இல்லாததால் கடந்த 1.9.2017 அன்று அரியலூர் மாவட்டம் குழுமூரைச்சார்ந்த அனிதா என்னும் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

இந்திய அளவில் பெரும் அதிர்வலையை உருவாக்கியது அனிதாவின் மரணம். கல்வி குறித்த பாஜக அரசின் நிலைப்பாடு தான் மாணவியை கொன்றது என்ற குற்றம் சாட்டப்பட்டது. போராட்டங்கள் இன்னும் தீவிரமாகின. இந்திய அளவில் நீட்டுக்கு எதிராக போராட்டங்கள் கவனம் பெற்றன. இந்த சூழலில் கடந்த 5.6.2018 அன்று பிரதீபா என்னும் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பெருவலூரை சார்ந்தவர் தான் மாணவி பிரதீபா. நீட் தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் போது தான் எலி மருந்து சாப்பிட்டு மரணித்தார். அதே போல திருப்பூரை சார் ந்த ரிதுஶ்ரீ என்னும் மாணவியும் பட்டுக்கோட்டையை சார்ந்த வைஸ்யா என்னும் மாணவியும் கடந்த 5.6.2019 அன்று ஒரே நாளில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த இரு மாணவிகளும் நீட்டுக்காக தயாராகிக்கொண்டு இருக்கும் போது தான் இந்த முடிவை எடுத்துள்ளனர். அதே போல கடந்த 6.6.2019 அன்று மரக்காணம் கூனிமேடுகுப்பத்தை சார்ந்த மோனிஷா நீட் தேர்வுக்கு தயாராகிக்கொண்டு இருக்கும் போது தற்கொலை செய்து கொண்டார். 

கடந்த 19.8.2020 அன்று கோவையை சார்ந்த மாணவி சுபஶ்ரீ நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.

இப்படி நீட் என்னும் அரச பயங்கரவாதத்தால் இத்தனை மாணவ- மாணவிகள் கொல்லப்பட்டுள்ளனர். இக்கொடூரத்தை கண்டித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் அறிக்கை மட்டுமே விடுத்திருந்தார்.( எல்லோருக்கும் விடுத்தாரா என்பது சந்தேகமே)

ஆனால், எலந்தைகுழியை சார்ந்த விக்னேஷ் குடும்பத்தினருக்கு மட்டும் 10 லட்சம் ரூபாய் நிதி பாமக சார்பில் வழங்குவதாக அறிவித்துள்ளார். நீட்டால் தன்னையே மாய்த்துக்கொண்ட விக்னேஷ் குடும்பத்தினருக்கு நிதி அறிவித்தது வரவேற்க கூடியது தான். ஆனால் இதற்கு முன் நீட் என்னும் அரச பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட குடும்பத்தினருக்கும் இதற்கு முன் மருத்துவர் ராமதாஸ் நிதி உதவி வழங்கினாரா? என்பது தான் தமிழக மக்கள் எழுப்பும் கேள்வி.

விக்னேஷ் குடும்பத்தினருக்கு மட்டும் எதற்காக 10 லட்சம் நிதி வழங்க வேண்டும்? சமூக நீதிக்காக போராடுவதாக பீற்றிக்கொள்ளும் மருத்தவர் ராமதாஸ் அணுகுமுறை சாதிய அணுகுமுறையாகவே இருப்பதற்கு இது ஒரு உதாரணம். 

அனிதா இறந்த போது அஞ்சலி செலுத்த வந்த அத்தனை அரசியல் கட்சியி தலைவர்களையும் பாதுகாப்பாக அழைத்து போய் அஞ்சலி செலுத்த உறுதுணையாக இருந்தவர் விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன். 

ஆனால், விக்னேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்த தலைவர் திருமாவளவன் வந்த போது வரக்கூடாது என பாமகவினரை தூண்டிவிடும் ராமதாஸ் அய்யாவின் அணுகுமுறை சரியா? திமுகவின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்த வந்த போதும் பாமகவினர் வன்முறையில் இறங்க தூண்டியது ஏன்?

மருத்துவர் ராமதாஸ் அப்பட்டமான சாதி வெறி அரசியலை செய்து வருவது ஒவ்வொரு நாளும் அம்பலப்பட்டே வருகிறார். ஆனாலும் சமூகநீதிக்காவலர் என்னும் பட்டத்தை வெட்கமே இல்லாமல் போட்டுக்கொள்கிறார்.

இந்த அணுகுமுறைக்கு பெயர் தான் சாதிய மன நோய் என்பது. ஆனால் சாதிய மனநோயாளி என்று மருத்துவர் ராமதாசை குறிப்பிட்டால் சிலர் பொங்குகிறார்கள். இந்த அணுகுமுறைக்கு என்ன பெயராம் என்று கேட்டுள்ளார்.