சரும நோய்களைக் குணப்படுத்தும் இறைவன் – குழந்தைகளின் பாலாரிஷ்ட தோஷம் போக்கும் தலம்!

நாகை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள செவ்வாய் ஸ்தலமான வைத்தீஸ்வரன் கோவிலில் வைத்தியநாதர் சுவாமி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.


வைத்தியநாதர் கோவில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் வைத்தியநாதர், தாயார் தையல்நாயகி. அருணகிரிநாதர், குமர குருபரர், படிக்காசு தம்பிரான், சிதம்பர முனிவர், காளமேகப்புலவர், ராமலிங்க அடிகள், வடுகநாத தேசிகர், தருமையாதீனம் ஆகியோரும் இத்தலம் பற்றி பாடியுள்ளார்கள். இக்கோயிலில் உள்ள முருகப்பெருமான் பெயர் முத்துக்குமார சுவாமி.

பொதுவாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் சிவன் இந்த ஸ்தலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். 5 கோபுரங்கள் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது ஸ்தலத்தின் சிறப்பு. மக்களுக்கு ஏற்படும் நோய்களை தீர்க்க பூலோகம் வந்த தன்வந்திரி முறையாக மருத்துவம் பார்க்காததால், சிவன் மருத்துவராகவும், அம்பிகை மருத்துவச்சியாகவும் தோன்றியதாக ஐதீகம்.

சுமார் 2000 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த கோவில் ஆகும். இந்த ஸ்தலத்தில் இறைவன் சிவபெருமான் வைத்தியநாதர் என்றும். அம்பாள் தையல் நாயகி எனவும் அழைக்கப்படுகிறார்கள். இந்த வைத்தீஸ்வரன் திருக்கோவிலுக்கு புள்ளிருக்கு வேளூர் என்ற வேறு பெயரும் உள்ளது. புள் என்ற சடாயு பறவை ராஜனும், இருக்கு என்ற வேதமும், வேள் என்ற முருகப்பெருமானும், ஊர் என்ற சூரியன் ஆகிய நால்வரும், இத்தலத்தில் வழிபட்டு நலம் பெற்றதால் இப்பெயர் பெற்றது.

கோவிலின் பெயர் சித்தாமிர்தம் குளம் என்று அழைக்கப்படுகிறது. முன்னொரு காலத்தில் இந்த குளக்கரையில் சதானந்த முனிவர் தவம் செய்து கொண்டிருந்த போது ஒரு பாம்பு தவளையை முழுங்க முயன்றது, அப்போது அவற்றை சதானந்த முனிவர் சபித்தார். அதன் காரணமாக இன்று வரை இந்த குளத்தில் பாம்பு, தவளை போன்றவை காணப்படுவது இல்லையாம்.

இந்த கோவிலின் மூலவர் சந்நிதிக்கு முன்பு தங்கம் மற்றும் வெள்ளியினால் ஆன இரண்டு கொடிமரங்கள் உள்ளது. மற்ற கோவில்களில் நவகிரகங்கள் ஓரு குறிப்பிட்ட அமைப்பில் அமைந்திருக்கும். ஆனால் இந்த இத்தலத்தில் நவகிரங்கள் அனைத்தும் மூலவரான சிவபெருமான் பின்புறம் ஒரே நேர்கோட்டில் அமைந்து, இறைவனின் கட்டளைக்கு பணிந்து பக்தர்களின் நோய்களையும், தோஷங்களையும் போக்குவதாக ஐதீகம்.

இந்த கோவிலின் கிழக்கில் பைரவ மூர்த்தியும், தெற்கில் விநாயகர், மேற்கில் வீரப்பத்திரியர், வடக்கில் காளி ஆகியவர்கள் காவல் தெய்வங்களாக எழுந்தருளியுள்ளனர். தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று. ஐந்து பிரகாரங்கள் கொண்ட இந்த கோவில், ஏழு நிலை ராஜ கோபுரங்கள் கொண்டது. தருமபுர ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இந்த கோவில் உள்ளது.

முன்னொரு காலத்தில் அங்காரகன், வெண் குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டு சிவன் பெருமானை வேண்டி நிற்க, அங்காரகனின் வேண்டுதலை ஏற்று அருள்பாலித்த ஈசன் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று சித்தமராத தீர்த்தத்தில் நீராடி வைத்யநாதனை வழிபடுமாறு கூறியுள்ளார். அங்காரகனும் அவ்வாறு செய்ய, அங்காரகனின் வெண் குஷ்ட நோயும் குணமானது. இதனால் இத்தலத்தில் உள்ள சித்தமராத குளத்தில் நீராடினால் அனைத்து நோய்களும் குணமாகும் என்பது பக்தர்களின் அயராத நம்பிக்கையாக உள்ளது.

தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு விற்கப்படும் புனுகு எண்ணையை வாங்கி தேய்த்து, நீராடி இறைவனை வழிபட்டால் அவை நீங்கும் என கூறப்படுகிறது. இங்கு தரப்படும் விபூதி, வில்வம், புற்றுமண் தைலம் கலந்து தயாரிக்கப்படும் மருந்து வெண்குஷ்ட நோய்க்கு சிறந்த நிவாரணமாக இருக்கிறது.உடல் பிணி மட்டுமன்றி நமது பிறவி பிணியையும், கல்வித் தடை, குழந்தையின்மை, திருமண தடை, தொழில் வியாபார நஷ்டம் ஆகிய அனைத்து கஷ்டங்களையும் வைத்தியநாதசுவாமி தீர்த்து வைப்பார் என்பது அனுபவம் வாய்ந்தவர்களின் கருத்தாக உள்ளது.

இங்கிருக்கும் அம்மனான தையல் நாயகியை வழிபடுவதால் குழந்தைகளுக்கு உண்டாகும் பாலாரிஷ்டம் தோஷம் நீங்கும். மருத்துவர்கள் மற்றும் மருத்துவ கல்வி பயிலும் மாணவர்கள் ஏராளமாக வந்து வழிபாடும் ஒரு கோவிலாக இது இருக்கிறது. நாடி சோதிடம் இங்கு புகழ்பெற்ற ஒன்று .