கொரோனா தடுப்பு மருத்துவக் கருவிகள்- அர்சவர்த்தனிடம் வைகோ மனு

கொரோனா பாதிப்பு வராமல் தடுப்பதற்கான மருத்துவக் கருவிகளை வாங்குவது தொடர்பாக முன்னேற்பாடு செய்யவேண்டுமென மத்திய நலவாழ்வுத் துறை அமைச்சரிடம் வைகோ நேரில் வலியுறுத்தினார்.


டெல்லியில் நேற்று மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் அர்சவர்தனிடம் வைகோ அளித்த மனு விவரம்:   “கோவிட்- 19 நோய்த்தொற்று பரவியதால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி, ஈரான், ஸ்பெயின் ஆகிய நாடுகளில், உயிர் காக்கும் காற்றோட்டக் கருவி (வென்டிலேட்டர்) மற்றும் அடிப்படைத் தேவையான மருத்துவக் கருவிகளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அதேபோல பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா, பிரித்தானிய முடியரசு ஒன்றியம் ஆகிய நாடுகள், மருத்துவக் கருவிகளை ஆக்குகின்ற, மருத்துவ வசதிகளை வழங்குகின்ற நிறுவனங்களுடன் பேசி, தங்களுக்கு வேண்டிய கருவிகளை உடனே பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.

 எனவே, நமது நாட்டில், இலட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டால், அத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்ள, மக்களுக்கு உரிய மருத்துவம் கிடைத்திட, போதுமான கருவிகள் இருக்கின்றனவா என்பது குறித்து, அரசு உடனே ஆய்வு செய்ய வேண்டும். குறுகிய காலத்திற்குள், மருத்துவக் கருவிகளை, எங்கிருந்து பெற முடியும் என்பதற்கான வாய்ப்புகளையும் உற்றுநோக்க வேண்டும்” என்று வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.