அ.தி.மு.க கூட்டணிக்கு தாவுகிறார் வைகோ! ஜெயக்குமார் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

தி.மு.க கூட்டணியில் இருப்பதாக கூறிக் கொண்டிருக்கும் வைகோ அ.தி.மு.க கூட்டணிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தி.மு.க கூட்டணியில் இருப்பதாக வைகோ கூறிக் கொண்டே இருக்கிறார். ஆனால் தி.மு.க தரப்பில் இருந்து அதற்கு தகுந்தாற்போல் எந்த சாதகமான அழைப்பும் வரவில்லை.  மேலும் நாடாளுமன்ற தேர்தலில் ம.தி.மு.கவிற்கு ஒரு சீட் மட்டுமே கொடுக்க முடியும் என்று தி.மு.க கூறி வருவதாக கூறப்படுகிறது.

 

அதே சமயம் வைகோ இரண்டு சீட்டுகளை எதிர்பார்ப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது குறித்து தி.மு.க வைகோவை அழைத்து பேச மறுத்து வருகிறது. அண்மையில் திருச்சியில் வைகோ ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது கூட ஸ்டாலின் தரப்பில் இருந்து சாதகமான பதில் வரவில்லை.

 

இந்த நிலையில் டெல்லி சென்றுள்ள வைகோ அங்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் நோக்கம் பட்டாசு தொழிலாளர்களை காப்பாற்ற கோரிக்கை வைப்பது தான் என்று மதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆனால் பட்டாசுத் தொழிலுக்கும் பாதுகாப்புத்துறை அமைச்சருக்கும் எந்த தொடர்பும் கிடையாது. மேலும் தமிழக பாஜகவின் அரசியல் விவகாரங்களை நிர்மலா சீதாராமன் தான் கவனித்து வருகிறார். எனவே அவருடனான வைகோவின் சந்திப்பு யூகங்களை எழுப்பியது.

 

இந்த நிலையில் சென்னையில் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.கவுடன் இருக்கும் சில கட்சிகள் கூட நம்முடன் வருவது குறித்து பேசி வருகின்றன என்று தெரிவித்திருந்தார்.

 

இந்த தகவலை செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் கூட உறுதிப்படுத்தினார். செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், தற்போது தி.மு.க கூட்டணியில் சில கட்சிகள் உள்ளன. அந்த கட்சிகள் கூட கூட்டணி குறித்து தங்களுடன் பேசுவதாக தெரிவித்துள்ளார்.

 

அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் பா.ஜ.கவின் மிக முக்கியமான தலைவரான நிர்மலா சீதாராமனை வைகோ நேற்று சந்தித்து பேசினார். அதே சமயம் ஜெயக்குமாரும் தங்களுடன் கூட்டணியில் சேர தி.மு.க கூட்டணி கட்சிகள் பேசுவதாக தெரிவித்துள்ளார்.

 

எனவே வைகோ தான் கூட்டணி குறித்து அ.திமு.கவுடன் பேசுவதாக அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வைகோவை பொறுத்தவரை எந்த நேரத்தில் எந்த முடிவு எடுப்பார் என்று யாருக்கும் தெரியாது. கடந்த 2006 சட்டமன்ற தேர்தல் அறிவிக்கும் வரை தி.மு.க கூட்டணியில் வைகோ இருந்தார். 

ஆனால் திடீரென ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க கூட்டணியில் இணைந்தார். இதே போன்று இதுநாள் வரை பா.ஜ.க – அ.தி.மு.கவை எதிர்த்து வரும் வைகோ திடீரென பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணியில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.