உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் வங்காளதேச அணியினர் தென் ஆப்பிரிக்கா அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அதிர்ச்சி அளித்தனர்.
தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது எப்படி? வங்க தேச வீரர் வெளியிட்ட ரகசியம்!
நேற்று ஓவல் மைதானத்தில் இவ்விரு அணியினரும் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஃபாப் டு பிளெசிஸ் முதலில் பந்துவீச தீர்மானித்தார். தொடக்கத்திலிருந்தே வங்காளதேச அணியினர் ஆக்ரோஷமாக விளையாடி வந்தனர். அணியின் தொடக்க ஆட்டக்காரரான சௌமியா சர்க்கார் அனைத்து இடங்களிலும் பந்தினை விரட்டியடித்தார்.
பின்னர் களமிறங்கிய அணியின் மூத்த வீரர்களான ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம் ஆகியோர் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்களை திறம்பட கையாண்டு அணியை நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்தனர். இறுதியாக முகமதுல்லா ரியாத் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை 330 க்கு தூக்கிச் சென்றார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் வங்காளதேச அணியினர் 6 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் எடுத்தனர்.
331 என்ற கடின இலக்கை துரத்தி ஆடிய தென் ஆப்பிரிக்கா அணியினர் தொடக்கத்தில் நிதானமாக விளையாடினர். பவர்பிளேயின் கடைசி ஓவரில் எதிர்பாராதவிதமாக அணியின் நட்சத்திர வீரரான குயின்டன் டி காக் ரன் அவுட் ஆனார். பின்னர் கேப்டன் ஃபாப் டு பிளெசிஸ், எய்டன் மார்க்கம், டேவிட் மில்லர் ஓரளவுக்கு தாக்குப்பிடித்து விளையாடினர்.
இருப்பினும் கடைசி நேரத்தில் விக்கெட்டுகள் சீராக விழுந்ததால் தென் ஆப்பிரிக்கா அணியினர் 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்களே எடுத்தனர். 21 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி பெற்றது.
வெற்றிக்குப் பின்பு வங்காளதேச அணி வீரரான மெஹதி ஹசான் அளித்த பேட்டியில், இந்த வெற்றி மறக்க முடியாதது ஆகும். எங்கள் அணியில் உள்ள சீனியர் மற்றும் ஜூனியர் வீரர்கள் சிறப்பாக கலந்துரையாடுகின்றனர். மூத்த வீரர்களிடமிருந்து எங்களால் நிறைய கற்றுக் கொள்ள முடிகின்றது. இந்த வெற்றி எங்கள் அனைவரின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாகும் என்று கூறினார்.
மெஹதி ஹசான், தென்ஆப்ரிக்க அணியின் கேப்டனான ஃபாப் டு பிளெசிஸ் விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கினை திசை திருப்பினார். இறுதியாக, எங்கள் அணியின் திறமைகள் உலகக் கோப்பை முழுவதும் வெளிப்படும் என்ற நம்பிக்கை உள்ளதாக கூறினார்.