தலைகீழ் ஆஞ்சநேயர்! பாதாள லோகத்தில் பாய்ந்த காட்சியை தரிசித்து மகிழுங்கள்!

உல்டே அனுமன் மந்திர் என்னும் ஆலயம் மத்தியப் பிரதேசத்தில் இருக்கிறது. இந்தோருக்கு அருகிலுள்ள சாவரே என்னும் ஊரிலிருக்கும் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் ஆலயம் இது.


இந்தியாவின் தர்ம நகரமான உஜ்ஜயினிலிருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் இந்த கோவில் இருக்கிறது. சிவப்பு நிற கோவணம், கையில் கதாயுதம் தாங்கிய கோலத்துடன் காட்சியளிக்கிறார் ஆஞ்சநேயர். இராம பக்தனான ஆஞ்சநேயர் அகலிகையின் நகரமான இந்தோரின் நான்கு திசைகளிலும் இருக்கிறார். இங்கு அவருக்கு பல ஆலயங்கள் உள்ளன.

மக்கள் அவரை ரண விஜய், ரண ஜித் என்று மதிப்புடன் கூறுகிறார்கள். போரில் வெற்றி தரக் கூடியவர் என்று இதற்குப் பொருள். பணிவான தோற்றத்துடன் காட்சியளிக்கும் அவரை ராம பக்தன் பஜ்ரங்கபலி, மாருதி நந்தன் என்று பல பெயர்களிலும் மக்கள் குறிப்பிடுகிறார்கள்.

இந்த ஆலயம் சாவரே என்று அழைக்கப்படுவதால் ஊரின் பெயரும் சாவரே என்றாகிவிட்டது. ராமாயண காலத்தில் இருந்தே இந்த ஆலயம் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆலய கர்ப்பக் கிரகத்தில் ஆஞ்சநேயர் தலைகீழாக செந்தூரத்தால் அலங்கரிக்கப்பட்டுக் காட்சி அளிக்கிறார். ஏராளமான பக்தர்கள் தங்கள் சிரமங்களை அனுமன் போக்குவார் என்ற முழுமையான நம்பிக்கையுடனும் பக்தியுடனும் இங்கு வருகின்றனர்.

ராமாயண காலத்தில் ராமனுக்கும் ராவணனுக்கும் இடையே போர் நடக்கிறது. ராவணன் தோற்கக்கூடிய நிலைமை வந்ததும் தன் அண்ணன் அஹிராவணனை அழைத்து தன் கஷ்டத்தை வெளியிடுகிறார். அதைத் தொடர்ந்து அஹிராவணன் இராமனின் போர்ப் படைக்குள் நுழைகிறான்.

அங்கிருந்து கொண்டு ஒரு சதி செயலில் ஈடுபடுகிறான். அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கும் போது தன்னிடம் இருக்கும் மாய சக்தியைக் கொண்டு ராமனையும் லட்சுமணனையும் மயக்கத்தில் ஆழ்த்தி அவர்களை கடத்திச் சென்று பாதாளத்தில் சிறை வைக்கிறான்.

இந்த சம்பவத்திற்கு பிறகு ராமனுடைய வானர சேனையில் அனைவரும் நடுக்கத்துடன் இருக்கின்றனர். ராமனையும் லட்சுமணனையும் அழைத்து வருவதாக வாக்களித்த அனுமன் அங்கிருந்து பாதாளத்திற்குப் புறப்பட்டார். பாதாளத்தில் அஹிராவணனுடன் போரிட்டு அழித்துவிட்டு ராம லட்சுமணனுடன் திரும்பி வருகிறார்.

பாதாளத்திற்குச் செல்லும்போது அனுமனின் தலை பூமியைப் பார்த்தவாறும், கால்கள் ஆகாயத்தைப் பார்த்தவாறும் இருந்தன. அவ்வாறு அனுமன் பாதாளத்தில் தலைகீழாக இறங்கிய இடம் இந்த கோவில் அமைந்திருக்கும் பகுதிதான் என்கிறார்கள். அதனால்தான் இங்கிருக்கும் ஆஞ்சநேயருக்கு உல்டே அனுமன் என்று பெயர். அதாவது தலைகீழாக இருப்பவர்.

இந்த ஆலயத்தில் ராமன், லட்சுமணன், சீதை, சிவன், பார்வதி ஆகியோருக்கும் சிலைகள் இருக்கின்றன. செவ்வாய்க்கிழமையில் ஆஞ்சநேயருக்கு விசேஷமாக செந்தூரம் கலந்த எண்ணெயால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த ஆலயத்திற்கு 3 அல்லது 5 செவ்வாய்க்கிழமைகள் வந்து வழிபடுபவர்களுக்கு கஷ்டங்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்பது பொதுவான நம்பிக்கை. இங்கு பல ஆன்மீகப் பெரியவர்களின் சமாதிகள் இருக்கின்றன.

ஆலய வளாகத்திற்குள் அரசமரம், வேப்பமரம், பாரிஜாத மரம், ஆல மரம் ஆகியவை இருக்கின்றன அங்கிருக்கும் இரு பாரிஜாத மரங்கள் பல நூறு வருடங்களாக இருக்கின்றன. அந்த மரங்களில் அனுமன் வசிக்கிறார் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இந்த மரங்களில் ஏராளமான கிளிகள் இருக்கின்றன. இவற்றை ஆன்மீகத்தின் சின்னங்களாக அனைவரும் நினைக்கிறார்கள். ராம பக்தரான துளசிதாசருக்கு அனுமன் கிளி வடிவத்தில் வந்து ராமரைக் காட்டினார் என்பது வரலாறு.