மராட்டியத்தில் ஆட்சி அமைக்கிறது சிவசேனா..! முதலமைச்சர் ஆகிறார் தாக்கரே! காங் - தேசியவாத காங்., ஆதரவு!

சட்டப்பேரவை தேர்தலில் வெறும் 56 எம்எல்ஏக்களை மட்டுமே பெற்ற சிவசேனா கட்சி மராட்டியத்தில் ஆட்சி அமைக்கிறது.


நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மராட்டியத்தில் பாஜக - சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 145 எம்எல்ஏக்களை எந்த கட்சியாலும் பெய முடியவில்லை. ஆனால் 105 இடங்களில் வென்று பாஜக தனிப்பெரும் கட்சியானது. 

பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட சிவசேனா 56 தொகுதிகளை வென்றது. இதனால் பாஜக - சிவசேனா கூட்டணி எளிதில் மராட்டியத்தில் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மராட்டியத்தில் இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவியை சிவசேனாவிற்கு வழங்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே வலியுறுத்தினார்.

சட்டமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையின் போதே பாஜக தலைவர் அமித் ஷா முதலமைச்சர் பதவியை சுழற்சி முறையில் வகிக்க ஒப்புதல் தெரிவித்ததாகவும் அந்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்றும் உத்தவ் தாக்கரே கூறினார். ஆனால் முதலமைச்சர் பதவியை விட்டுத் தர பாஜக மறுத்துவிட்டது.

இதனால் பாஜக - சிவசேனா கூட்டணி முறிந்தது. அதே சமயம் துவக்கத்தில் இருந்தே 54 தொகுதிகளில் வென்ற தேசியவாத காங்கிரஸ் மற்றும் 44 தொகுதிகளை கைப்பற்றிய காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைக்க சிவசேனா ஆர்வம் காட்டியது. ஆனால் சிவசேனா பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறாமல் ஆட்சி அமைப்பது குறித்து பேச முடியாது என்றார்.

இந்த நிலையில் இன்று காலை மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா ராஜினாமா செய்தது. இதனை தொடர்ந்து மும்பையில் சரத் பவாரை சந்தித்து உத்தவ் தாக்கரே பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சோனியாவுடனுடம் தொலைபேசி மூலமாக உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினார். 

இதனை தொடர்ந்து சிவசேனா அரசு அமைய தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் சம்மதம் தெரிவித்தன. மேலும் முதலமைச்சர் பதவியை சிவசேனாவிற்கு கொடுக்கவும், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தலா ஒரு துணை முதலமைச்சர் பதவியை பெற்றுக் கொள்ளவும் ஒப்புக் கொண்டன.

இதனை அடுத்து ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் உத்தவ் தாக்கரேவின் மகனும் எம்எல்ஏவுமான ஆதித்யா தாக்கரே ஆளுநரை சந்தித்து உரிமை கோரினார். இதனை அடுத்து மராட்டியத்தில் சிவசேனை ஆட்சி அமைகிறது.