உதயநிதி கட்சிக்காக ரொம்பவே உழைத்திருக்கிறாராம்... ஸ்டாலின் பதிலுக்கு சிரிக்கும் உடன்பிறப்புகள்.

என்னுடைய குடும்பத்தில் இருந்து வேறு ஒரு வாரிசு அரசியலுக்கு வரவே வராது என்று தெரித்த தி.மு.க.தலைவர் உடனடியாகவே உதயநிதியை தன்னுடைய வாரிசாக அறிவித்துவிட்டார். இப்போது, தி.மு.க.வில் ஸ்டாலினுக்கு அடுத்த மரியாதை உதயநிதிக்குத்தான் வழங்கப்படுகிறது.


உதயநிதியின் வாரிசு அரசியலுக்கு கட்சியினர் அத்தனை பேரும் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையிலும், உதயநிதிக்கு ஆதரவாகப் பேசி வருகிறார் ஸ்டாலின். சமீபத்தில் ஆங்கில பத்திரிகைக்கு ஸ்டாலின் கொடுத்த பேட்டிக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. 

ஸ்டாலின் என்ன சொன்னார் என்று படித்துப் பாருங்கள். ``அரசியல் நோக்கத்தோடு சொல்லப்படுகின்ற ஒரு கருத்து. என்னையும் `வாரிசு, வாரிசு...’ என்று சொன்னார்கள். படிப்படியாக நானாக வளர்ந்து வந்திருக்கிறேன். அதே போன்று உதயநிதியைப் பொறுத்தவரை, எப்படி மற்ற கட்சித் தோழர்கள், கட்சியில் இருக்கக்கூடிய நிர்வாகிகள், படிப்படியாக வளர்ந்து வந்து இன்றைக்கு ஒரு நல்ல நிலைமைக்கு வந்திருக்கிறார்களோ, அப்படித்தான் வந்திருக்கிறார்.

துறைமுகம் தொகுதி, சேப்பாக்கம் தொகுதியில் தலைவர் அவர்கள் நின்றபோதும், நான் ஆயிரம் விளக்கு தொகுதியில் வேட்பாளராக நின்றபோதும் தேர்தல் பிரசாரம் செய்திருக்கிறார். அதற்குப் பிறகு நாடாளுமன்றத் தேர்தலில் பிரசாரம் செய்திருக்கிறார்.தி.மு.க முன்னெடுத்த ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ போன்ற பிரசாரங்களில் அவர் பங்கேற்று, அவருடைய பணியைச் செய்துகொண்டிருக்கிறார். 

இளைஞரணிப் பொறுப்புக்கு வந்த பிறகு, இளைஞரணிக்கு ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிற பணிகளைச் செய்துகொண்டிருக்கிறார். யார் வளர்ந்து வந்தாலும், இந்தக் கட்சியைப் பொறுத்தவரை, முக்கியப் பொறுப்புக்கு, முக்கிய இடத்துக்கு வரக்கூடிய வாய்ப்பு நிச்சயம் உண்டு. அப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது; இனிமேலும் அப்படித்தான் இருக்கும்'' என்றும் பதிலளித்திருக்கிறார் அவர். ஸ்டாலினின் இந்த விளக்கம்தான் தற்போது மிகக் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

இந்த வாய்ப்புகளை எல்லாம் யாருக்குக் கொடுத்திருந்தாலும் இன்று அவர்கள் சூப்பர் தலைவராக வளர்ந்திருப்பார்கள். இப்படி கட்சிக்குள் திணித்துவிட்டு இப்படி விளக்கமும் கொடுக்கலாமா என்று கடுப்பாகிறார்கள் உடன்பிறப்புகள்.