முருகேசனை மறந்துட்டீங்களே உதயநிதி… தி.மு.க மீது கோபமாகும் உடன்பிறப்புகள்.

கருணாநிதி இருந்தவரையிலும், நிர்வாகிகளின் மறைவுக்கு கண்ணீருடன் கடிதம் எழுதி உடன்பிறப்புகளை ஆறுதல்படுத்துவார். ஆனால், திமுக மாநில தொண்டரணி செயலாளர் நாகை முருகேசனின் மறைவை, தி.மு.க. கண்டுகொள்ளவே இல்லை என்ற வேதனை கட்சியினருக்கு எழுந்துள்ளது.


நாகை மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன் இளம் வயது முதலே திமுகவில் தீவிர ஈடுபாடு கொண்டவர். திமுக கூட்டங்கள், மாநாடுகள் எங்கெல்லாம் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் முருகேசனை பார்க்க முடியும். டிக்கெட் கொடுப்பதிலிருந்து, தலைவர்களுக்கு பாதுகாப்பு தருவது, கூட்டத்தை ஒழுங்குபடுத்துவது என எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்வார். அறிவாலயத்திலும் பணியிலிருந்ததால் கருணாநிதி, ஸ்டாலின் தொடங்கி அத்தனை தலைவர்களிடமும் அறிமுகம் உண்டு.

கட்சி பணியிலேயே கவனம் செலுத்தியதால் குடும்பத்தை குறிப்பாக உடல்நலனை கவனிக்காமல் விட்டுவிட்டார். சிறுநீரக பாதிப்புக்கு ஆளான முருகேசன் டயாலிசிஸ் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். இதற்காக மாதம் தோறும் பல ஆயிரங்களை செலவிட வேண்டியிருந்தது. வசதியில்லாத முருகேசன் குடும்பம் திண்டாடியது.

அக்கம் பக்கத்தினர் ஆலோசனை சொல்ல, தனது இக்கட்டான நிலைமையை தெரியப்படுத்தி தேவையான நிதியுதவி செய்யுமாறு தலைமைக்கு மிகுந்த நம்பிக்கையோடு கடிதம் எழுதினார். நீண்ட நாட்களாக பதில் இல்லை. யானைப் பசிக்கு சோளப் பொறி என்கிற வகையில் கருணாநிதியின் வங்கி வைப்புத் தொகையிலிருந்து கிடைக்கும் வட்டியிலிருந்து நடத்தப்படும் அறக்கட்டளையிலிருந்து ரூபாய் 25 ஆயிரம் மட்டும் அனுப்பி வைக்கப்பட்டது.

இதனால் வெறுத்துப்போன முருகேசன் அந்த பணத்தை அப்படியே திருப்பி அனுப்பிவிட்டார். ‘’ காலம் முழுவதும் கட்சி கட்சி என இருந்த எனக்கு ஒரு மாத மருத்துவ செலவுக்குக் கூட பத்தாத தொகையை அனுப்பி அவமானப் படுத்துவதா?’’ என நெருங்கிய வட்டங்களில் கொந்தளிப்பை கொட்டியிருக்கிறார். இந்த மன வருத்தத்தில் இருந்த அவர் கடந்த வாரம் காலமானார். சொற்ப அளவிலான திமுகவினரே முருகேசனின் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.

முருகேசன் இறந்த சமயத்தில் கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி நாகை மாவட்டத்தில்தான் முகாமிட்டிருந்தார். இருந்தபோதிலும் முருகேசன் வீட்டை அவர் எட்டிப்பார்க்காதது திமுக தொண்டர்கள் மத்தியில் மிகுந்த வெறுப்பையும், வேதனையையும் ஏற்படுத்திவிட்டது.

கட்சியினரை கண்டுகொள்ளாமல் விடுவதில் தி.மு.க.வுக்கு நிகர் தி.மு.க.தான்.