செத்துப் பிறந்தவர்! குப்பையில் வீசப்பட்டவர்! 29 வருடங்களுக்கு பிறகு நிகழ்த்திய அற்புதம்!

லக்னோ: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிக்கு ரூ.12.50 லட்சம் பரிசு வழங்கப்பட்டுள்ளது.


 நூபுர் சிங், என்ற இளம்பெண் தற்போது உத்தரப் பிரதேசத்தில் மிகப் பிரபலமாக உள்ளார். ஆம், அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில், இந்த பெண்ணிற்கு, ரூ.12.50 லட்சம் பரிசு தரப்பட்டுள்ளது.

உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பிகாபுர் கிராமத்தில் வசிப்பவர் நூபுர் சிங். இவர், 29 ஆண்டுகளுக்கு முன் பிறந்த போது, இறந்துவிட்டதாகக் கூறி கான்பூர் அரசு மருத்துவமனை டாக்டர்களால் குப்பையில் வீசப்பட்டார். பின்னர், அவரது உறவினர்கள், மீட்டெடுத்து, உடலில் உயிர் இருப்பதைக் கண்டறிந்து மருத்துவ சிகிச்சை அளித்தனர்.

பிறந்ததும் சரியான மருத்துவ உதவி செய்யப்படாததால், அவரது கால் பகுதி செயலிழந்துவிட்டது. இதனால், நூபுர் சிங், கால்கள் இயங்காத மாற்றுத்திறனாளியாக மாறிவிட்டார். 

அதேசமயம், தனது குறையை பற்றி கவலைப்படாமல் படிப்பில் கவனம் செலுத்திய நூபுர் சிங்கை, அவரது பெற்றோர் விவசாய தொழில் பார்த்து நன்றாக படிக்க வைத்தனர். தற்போது அவர், பிஎட் நுழைவுத் தேர்வு எழுதி வெற்றியும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், அவரை கவுரவிக்கும் வகையில் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு தரப்பட்டது. அவரும் பங்கேற்று, பல்வேறு கேள்விகளுக்கு சிறப்பாக பதில் அளித்தார். இதில், தற்போது ரூ.12.50 லட்சம் பரிசு வென்ற அவருக்கு, பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.