விலை மதிப்பு இல்லா திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி! கோட்டை விட்ட இந்தியா!

சுதந்திர போராட்ட வீரர் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கியை ஏலம் எடுக்கும் விசயத்தில், இந்தியா கோட்டை விட்டுள்ளது.


இங்கிலாந்தின் பெர்க்‌ஷைர் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், தங்கள் வீட்டை சுத்தம் செய்துள்ளனர். அப்போது, வீட்டின் பரணில், பழமையான வாள்கள், நெருப்பு வைத்து வெடிக்க வைக்கும் கைத்துப்பாக்கி, வெற்றிலைப்பெட்டி என்பது உள்ளிட்ட 8 வகையான தொல்லியல் பொருட்களை கண்டுபிடித்தனர். இவை அனைத்தையும், ஆண்டனி க்ரிப்  ஆர்ம்ஸ் அண்ட் ஆர்மர் என்ற நிறுவனத்திடம், ஏலம் விடுவதற்காக, அவர்கள் ஒப்படைத்தனர்.

அந்த நிறுவனம் இதன்பேரில் நடத்திய ஆய்வில், குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தும் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் திப்பு சுல்தான் பயன்படுத்தியவை என தெரியவந்தது. கடந்த 1799ம் ஆண்டு ஸ்ரீரங்கப்பட்டினம் போரில் திப்பு சுல்தான் வீரமரணம் அடைந்தபின், இந்த ஆயுதங்களை, கிழக்கிந்திய கம்பெனியின் மேஜர்  தாமஸ் ஹார்ட் என்பவர் எடுத்துச் சென்றுள்ளார். 

இந்த பொருட்களை, ஏலம் விடுவதாக, ஆண்டனி க்ரிப் ஆர்ம்ஸ் நிறுவனம் கடந்த மாதமே அறிவித்திருந்தது. இந்த ஏலத்தை தடுத்து நிறுத்தி, குறிப்பிட்ட பொருட்களை இந்தியா கொண்டுவர லண்டனில் உள்ள இந்திய தூதரகம் தீவிர முயற்சி மேற்கொண்டது. ஆனால், வெள்ளி முலாம் பூசிய, தங்க கைப்பிடிகள் கொண்ட இந்த வாள்களும், மற்ற பொருட்களும், 1,07,000 பவுண்டுகளுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

இவை மில்லியன் கணக்கில் ஏலம் போகும் என எதிர்பார்த்த நிலையில், இந்திய தூதரகத்தின் தலையீட்டால் இது குறைந்துவிட்டதாக, ஏல நிறுவனத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.  எனினும், இந்திய அரசு மெத்தனமாக நடந்துகொண்டதே காரணம் என பலரும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.