பள்ளி, கல்லூரிகளுக்கு செப்டம்பர் வரை லீவ்..? விரைவில் வருகிறது அறிவிப்பு!

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளை வருகிற செப்டம்பர் மாதம் திறக்கலாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.


கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பரவ ஆரம்பித்தவுடன், பொதுமக்கள் ஒன்றாக கூடுவதை தவிர்க்க மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களை மூட உத்தரவிட்டு இருந்தது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதால் ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்லூரித் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகியது.

இந்நிலையில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் எப்போது திறக்கலாம் மற்றும் எப்போது தேர்வுகளை நடத்தலாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி)ஆய்வு செய்து வந்தது. இதனடிப்படையில் செப்டம்பர் மாதம் கல்லூரிகளை திறக்கலாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. மேலும் தேர்வுகளை பொறுத்தவரை அதற்குரிய கட்டமைப்பு வசதிகள் இருந்தால் ஆன்லைன் மூலமாக தேர்வுகளை பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகள் நடத்தலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

ஒருவேளை ஆன்லைனில் தேர்வுகளை நடத்துவதற்குரிய கட்டமைப்பு வசதிகள் இல்லாவிட்டால் ஊரடங்கு முடிந்த பிறகு பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) தேர்வுகளை நடத்துவது பற்றிய வழிகாட்டுதலை அறிவிக்கும் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் வரும் கல்வி ஆண்டுக்கான நெறிமுறைகள் மற்றும் தேர்வுகள் கட்டமைப்பு போன்றவை உருவாக்கப்படும். தற்போது பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ள இந்த பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு ஆய்வு செய்து இறுதி அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது