நீட்தோல்வி! திருப்பூர் மாணவி தூக்கில் தொங்கினார்! பட்டுக்கோட்டை மாணவி தீக்குளித்தார்!

நீட்தேர்வில் தோல்வி அடைந்த காரணத்தினால் தமிழகத்தில் இரண்டு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.


எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் சுமார் 14 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் நிட் எழுதினர். இவர்கள் 48.57 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

சென்னையை சேர்ந்த ஸ்ருதி எனும் மாணவி தமிழக அளவில் முதலிடம் பிடித்தார். அகில இந்திய அளவில் இவரால் 57வது இடமே பிடிக்க முடிந்தது. இந்த நிலையில் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததாக திருப்பூர் வெள்ளியங்காட்டில் மாணவி ரிதுஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவி ரிதுஸ்ரீ 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600-க்கு 490 மதிப்பெண்கள் பெற்றிருந்த நிலையில் நீட் தேர்வில் தோல்வி அடைந்துள்ளார்.

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்து ரிதுஸ்ரீ தற்கொலை செய்துகொண்டதாக பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர். இதே போல் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைய சேர்ந்த வைஸ்யா எனும் மாணவியும் நீட் தேர்வில் தோல்வி அடைந்துள்ளார்.

இதனால் வைஸ்யா தீக்குளித்து உயிரிழந்துள்ளார். நீட் தேர்வு எழுதி வெற்றி பெறவில்லை என்றால் மீண்டும் அடுத்த ஆண்டு தேர்வு எழுதலாம். இல்லை என்றால் வேறு படிப்பு படித்து வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதை மாணவ, மாணவிகள் உணர வேண்டும்.