தூத்துக்குடி பாலிமர் டிவி செய்தியாளருக்கு அரிவாள் வெட்டு! உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை!

ஸ்ரீவைகுண்டம் பாலிமர் செய்தியாளருக்கு அரிவாள் வெட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் முத்துவேல். இவர் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு பாலிமர் டிவி செய்தியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடம் காவல் ஆய்வாளர் கஜேந்திரன் மீது தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீத சிலர் கந்துவட்டி புகார் அளித்தனர்.

எஸ்பி அலுவலகத்தில் அளித்த அந்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீவைகுண்டம் பாலிமர் செய்தியாளர் முத்துவேல் அந்த செய்தியினை தொலைக்காட்சிக்கு அனுப்பி ஒளிபரப்ப ஏற்பாடு செய்தார். இதனால் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் கஜேந்திரன் செய்தியாளர் முத்துவேல் மீது ஆத்திரத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் செய்தியாளர் முத்துவேல் அவரது அலுவலகத்தில் அமர்ந்திருந்து தனது வழக்கமான பணிகளை மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த சண்முகநாதன் என்ற நபர் தனது கையில் வைத்திருந்த அரிவாளால் முத்துவேலை கொடூரமாக வெட்டியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த முத்துவேல் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சண்முகநாதன் ஆய்வாளர் கஜேந்திரன் ஏவிய கூலிப்படை என்று செய்தியாளர் முத்துவேல் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு போலீசாருக்கும் அப்பகுதி செய்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் தூத்துக்குடி மட்டும் இன்றி தமிழகம் முழுவதும் செய்தியாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.