நாளை முதல் பயணிகள் ரயில் மீண்டும் ஓடும்..! மத்திய அரசு அறிவிப்பு..! முடிந்தது ஊரடங்கு!

மே 12 ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.


கடந்த மார்ச் மாதத்திலிருந்து நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால், கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பயணிகள் ரயில் சேவை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் மே 12-ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்படும் என்று மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் மே 12-ஆம் தேதி முதல் டெல்லியிலிருந்து நாட்டின் முக்கிய 15 நகரங்களுக்கு பயணிகள் ரயில் சேவை இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இரு மார்க்கங்களிலும் 15 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு ரயில்களாக இயக்கப்படும் இந்த ரயில் சேவை டெல்லி, ஹவுரா பாட்னா ,ராஞ்சி, புபனேஸ்வர், செகந்திராபாத் ,பெங்களூர், சென்னை, திருவனந்தபுரம், மும்பை, அகமதாபாத் உள்ளிட்ட 15 முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ரயில் சேவைகளுக்கு நாளை மாலை 4 மணி முதல் முன்பதிவு செய்யப்படும் என்றும் ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட் தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுன்டர்கள் இயங்காது எனவும் கூறப்பட்டுள்ளது. 


உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் வைத்திருப்பவர்கள் மட்டுமே ரயிலில் பயணம் செய்ய ரயில் நிலையங்களில் அனுமதிக்கப் படுவார்கள் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. பயணிகள் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் எனவும் நோய்தொற்று இல்லாதவர்கள் மட்டுமே ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப் படுவார்கள் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.