அயோத்தி யாருக்கு? இன்று காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு!

அயோத்தியில் சர்ச்சைக்குறிய ராமஜென்ம பூமி மற்றும் பாபர் மசூதி இருந்த இடம் யாருக்கு என்பதில் இன்று காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது.


அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் உரிமை கோரி வருகின்றன. இந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரித்தது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாடா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கடந்த 2010 செப்டம்பர் 30-ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை முடிந்து தான் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது. காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றத்தின் தனது சேம்பரில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளிக்க உள்ளது. மிக முக்கியமான தீர்ப்பு என்பதால் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் இரண்டு மதங்களுக்கு இடையிலான தீர்ப்பு என்பதாலும் உத்தரபிரதேசம் மட்டும் அல்லாமல் நாட்டின் அனைத்து மாநிலங்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளன. தீர்ப்பிற்கு பிறகு அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்பது தான் அனைவரது எதிர்பார்ப்பும் கூட.