இன்று ஐப்பசி சனி பிரதோஷம்! தோஷங்கள் தீர்க்கும் தரிசன மகிமை

சனிப்பிரதோஷ நாளில் சிவபெருமானின் காவல் தெய்வமான நந்தியம் பெருமானை வழிபட்டால், சகல தோஷங்களும் விலகும் என்பது நம்பிக்கை.


எனவே இன்று நவம்பர் 9ஆம் தேதியான சனிக்கிழமையன்று நந்தி தேவரை அனைவரும் போற்றி வணங்குவதோடு, அபிஷேகத்திற்கு பொருட்கள் வாங்கி தரலாம். மற்ற பிரதோஷ நாட்களை விட மகா பிரதோஷம் எனப்படும் சனிப்பிரதோஷ நாள் மிகவும் விசேஷமானது. சனிப்பிரதோஷ நாளில் நந்தி தேவரை வழிபட்டால் சனி பகவானால் ஏற்படும் சகலவிதமான துன்பங்களும் நம்மை விட்டு ஒடிப்போகும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை நாட்களில் வரும் திரயோதசி நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையில் உள்ள காலத்தை பிரதோஷ காலம் என்று முன்னோர்கள் கணித்துள்ளனர். காரணம் அன்று தான் எம்பெருமான் ஆலகால விஷத்தை உண்டு அகிலத்தை காத்தருளினார் என்று சிவபுராணம் கூறுகின்றது.

பிரதோஷங்கள் 5 வகைப்படும். நித்தியப் பிரதோஷம், பக்ஷப் பிரதோஷம், மாத பிரதோஷம், பிரளய பிரதோஷம், மகா பிரதோஷம் என்பதாகும். இதில் சனிக்கிழமைகளில் வந்தால், அது சனிப்பிரதோஷம் என்றும் மகா பிரதோஷம் என்றும் சொல்லப்படுகிறது.

தேவர்களும், முனிவர்களும் மகிழ்ச்சி அடையும் வகையில், சிவபெருமான் பிரணவத்தின் முழு வடிவமான நந்தியின் கொம்புகளின் நடுவில் நின்று ஆனந்த தாண்டவம் ஆடினார். இதைக் கண்ட தேவர்கள், முனிவர்கள் உள்பட அனைவரும் எம்பெருமானின் ஆனந்த தாண்டவத்தை தரிசித்தார்கள். இப்படி எம்பெருமான் அனைவருக்கும் அருள் புரிந்த காலமே பிரதோஷ காலம் என்று கூறப்படுகிறது.

மற்ற நாட்களில் நாம் சிவபெருமான் ஆலயத்தை சுற்றி வலம் வருவதற்கும், பிரதோஷ நாளில் வலம் வருவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. மற்ற நாட்களில் பொதுவாக வலம் இருந்து இடமாக சுற்றி வருவது வழக்கம். ஆனால் பிரதோஷ காலங்களில் இடமிருந்து வலமாக சுற்றி வரவேண்டும். இதை 'சோமசூக்த பிரதட்சிணம்' என்று சொல்வதுண்டு. சோமசூக்த பிரதட்சிணம் செய்யும் முறையானது, முதலில் நந்தி தேவரையும், பிரணவ வடிவான அதன் கொம்புகளுக்கு நடுவில் நடனமாடும் எம்பெருமானையும் தரிசிக்க வேண்டும். அதன் பிறகு, இடப்புறமாக சென்று அபிஷேக தீர்த்தம் வந்து சேரும் இடமான கோமுகி தீர்த்த தொட்டியை தாண்டாமல் சண்டிகேஸ்வரரை வணங்க வேண்டும். பின்பு வந்த வழியே திரும்பி வந்து மீண்டும் நந்தியம்பதியை தரிசித்து விட்டு, பின்பு வழக்கம் போல கோவிலை வலம் வரவேண்டும். இப்படி மூன்று முறை வலம் வரவேண்டும். இதற்கு பெயர் தான் சோமசூக்த பிரதட்சிணம் என்று பெயர்.

மற்ற பிரதோஷ நாட்களை விட மகா பிரதோஷம் எனப்படும் சனிப்பிரதோஷ நாள் மிகவும் விசேஷமானது. சனிப்பிரதோஷ நாளில் நந்தி தேவரை வழிபட்டால் சனி பகவானால் ஏற்படும் சகலவிதமான துன்பங்களும் நம்மை விட்டு ஒடிப்போகும். மேலும், சனிப்பிரதோஷ நாளில் எம்பெருமான் ஈசனை வழிபட்டால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சிவபெருமான வழிபாடு செய்த புண்ணியம் நமக்கு கிடைக்கும். இந்த நாளில் வசதி படைத்தவர்களும், சிவனடியார்களும் சிவபெருமானுக்கும், நந்தி தேவருக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்தால் சகல சவுபாக்கியங்களும் கிட்டும்.

சனிப்பிரதோஷ காலத்தில் நந்தியை வழிபாடு செய்தால் இந்திரனுக்கு சமமான பெயரும் புகழும், செல்வாக்கும் கிட்டும். அன்றைக்கு செய்யும் எந்தவித தானமும் எண்ணிலடங்கா பலனைக் கொடுக்கும் என்பதோடு, இனிமேல் பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்று சிவபுராணம் சொல்கிறது.

பிரதோஷ வேளையான அசுர வேளையில் இறைவனிடம் ஒடுங்குதல் அல்லாமல் முரண்பாடான பணிகளை செய்வதோ, சரீர உறவுகளை ஏற்படுத்திக்கொள்வதோ, மது அருந்துவதோ, சண்டையிடுவதோ கூடாது. மாறாக செய்யின் அச்செயலே பூத, பிரேத, பைசாசங்களுக்குண்டான குணங்களாகச் கருதி பாபம் ஏற்படும் என்று அறியப்படுகின்றது.

அன்றைய பாபம் அன்றே கழியும் பொருட்டே பிரதோஷ காலங்களில் இறைவன் முன்பு உலக உயிர்கள் சரணடைய வேண்டுமென்று ரிஷிநூல்களில் கூறப்பட்டுள்ளது.