சிவராத்திரியுடன் கூடிய தேற்பிறை பிரதோஷம்! இன்று சிவனை வணங்கினால் எத்தனை நன்மை கிடைக்கும் தெரியுமா?

சிவபெருமானை வழிபடுவதற்குரிய ஒரு சிறந்த தினமாக மாதந்தோறும் வருகின்ற வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதோஷ தினங்களில் இருக்கின்றன.


அதிலும் சிறப்பு வாய்ந்த ஆவணி மாதத்தில் சிவராத்திரியும், பிரதோஷமும் சேர்ந்து ஒன்றாக ஒரே தினத்தில் இன்று வந்துள்ளதால் சிவபெருமானை வழிபடுவொர்க்கு நற்பலன்கள் கிட்டும். 

சிவனுக்கு உகந்த இரவு என்று சொல்லக்கூடிய சிவராத்திரியை பற்றி அற்புதமான தகவல்கள் அதிகம் உள்ளன. சிவ சிவ என்று சொன்னால் போதும் துன்பங்கள் எல்லாம் திசை தெரியாமல் போகும். சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் தருபவர் என்று பொருள். சிவபெருமான் லிங்கமாக உருவமெடுத்த தினமே சிவராத்திரி. நமசிவாய என்னும் மந்திரத்தை மனதில் நினைக்க எந்த தீமைகளும் நெருங்காது. 

சிவனை அதிகாலையில் வணங்கினால் நோய்கள் தீரும். பகலில் வணங்கினால் விருப்பங்கள் நிறைவேறும். இரவில் வணங்கினால் மோட்சம் கிடைக்கும். சிவராத்திரி தினத்தன்று, தியாகராஜர் என்ற பெயரில் ஈசன் வீற்றிருக்கும் தலங்களில் தரிசனம் செய்தால் பாவங்களில் இருந்து விடுபடலாம்.  எறும்பு, நாரை, புலி, சிலந்தி, யானை, எலி போன்றவை கூட சிவ பூஜையால் மோட்சம் அடைந்துள்ளன. 

ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருப்பது என்பது நூறு அசுவமேத யாகம் செய்த பலனையும், பல தடவை கங்கா ஸ்நானம் செய்த பலனையும் தரக்கூடியது. சிவராத்திரி விரதம் இருந்ததால் விஷ்ணு சக்ராயுதத்துடன் லட்சுமியையும், பிரம்மா சரஸ்வதியையும் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. 

சிவனின் மூன்று கண்களாக சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் உள்ளனர். சிவராத்திரி தினத்தன்று மாலை சூரியன் மறைந்ததில் இருந்து மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை சிவ பூஜை செய்பவர்களுக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்கும். சிவராத்திரி விரதமானது வயது, இன, மத வேறுபாடுகளைக் கடந்த யாவரும் அனுஷ்டிக்கக்கூடியது.  சிவராத்திரியில் விரதம் இருந்து வழிபட்டால் புத்திர தோஷம், திருமணத்தடை என அனைத்து துன்பங்களும் நீங்கும். 

பிரதோஷம் - பொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை அனைவரும் வணங்குகின்றனர். இந்த இடத்தில் 'அனைவரும்" என்பது மனிதர்களை மட்டும் குறிக்கவில்லை. முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு ஆகியோரையும் குறிக்கும். அந்த நேரத்தில் சிவனும் ஷேம நலத்திற்காக வழிபாட்டில் ஈடுபடுவார் என்பது ஐதீகம். சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷமும் ஒன்று. பிரதோஷ வழிபாடு சகல சௌபாக்கியங்களையும் தர வல்லது. 

தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலம் பிரதோஷம் ஆகும். பிரதோஷ நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு 'முக்தி" நிச்சயம் என்கிறது சாஸ்திரம். 

பிரதோஷ பூஜை மேற்கொள்ளும்போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்குகிறது. எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து, வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும். காராம்பசுவின் பாலைக் கொண்டு நந்தியையும், சிவனையும் வழிபட்டால் பூர்வ ஜென்ம வினைகள், பெண்ணால் வந்த சாபம் உள்ளிட்டவை நீங்கும் என்பது ஐதீகம். 

குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். வறுமை நீங்கி செல்வம் பெருகும்.