தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 120 பேருக்கு கொரோனா! சென்னையில் மட்டும் 102 பேருக்கு..! பீதி கிளப்பும் கோவிட்19..!

தமிழ்நாட்டில் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 120 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


இந்தியா முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1937 ஆக இருந்தது. குறிப்பாக சென்னையில் இதுவரை 575 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 120 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதில் சென்னையில் மட்டும் 102 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவும் வேகம் தற்போது சென்னையில் தான் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் அதிக மக்கள் குறைவான இடைவெளியில் வசிப்பதால் கொரோனா வைரஸ் தொற்று பரவுவது அதிகமாக உள்ளது என்று வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

இந்த வகையில் இன்று ஒரே நாளில் சென்னையில் 102 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி இருப்பது சென்னை வாசிகளை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் குறிப்பாக ராயபுரம் மற்றும் திரு வி க நகர் ஆகிய இடங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிக அளவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.