உங்கள் வயதின் எண்ணிக்கையில் விரலி மஞ்சள் மாலை..! உடனே திருமணம் கைகூடும் திருத்தலம்.

புனிதத் தன்மை கொண்ட மரங்களுள் அத்தியும் ஒன்று. அதில் தெய்வ சிலைகள் வடிப்பதை ஆகமங்களும் அனுமதிக்கின்றன


அக்காலத்தில் சோழவள்ளி என்றும் தற்போது நெல்லிக்குப்பம் என்றும் அழைக்கப்படும் ஊரில் அமைந்துள்ள கிருஷ்ணர் கோவிலில் அத்தி மரத்தால் செய்யப்பட்ட ராதா ருக்மிணி சமேத வேணுகோபால சுவாமி எழுந்தருளியுள்ளார்.

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் தற்போது கோயில் இருக்குமிடத்தில் பஜனை மடம் ஒன்று இருந்தது. வெளியூரைச் சேர்ந்த அன்பர் ஒருவர் அங்கே தங்கி தினமும் பாடல்கள் பாடி பெருமானை பூஜித்து வந்தார். அப்பகுதியில் பணியில் இருந்த ஆங்கிலேயர்கள் தங்கள் உபயோகத்திற்கு அந்த இடத்தைப் பயன்படுத்தும் நோக்கில் பஜனை மடத்தை அகற்ற முடிவு செய்தனர். அதையறிந்த பெருமாள் பக்தர்கள் ஒன்று சேர்ந்து போராட ஆங்கிலேயர்கள் தங்கள் எண்ணத்தைக் கைவிட்டனர்.

பின்னர் இந்த பஜனை மடத்தை ஒரு கோயிலாக உருவாக்க முடிவு செய்த பக்தர்கள் நெல்லிக்குப்பம் அருகே வான்பாக்கம் என்ற கிராமத்தைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவரின் உதவியை நாடினர். அவர் தோட்டத்தில் பெரிய அத்தி மரம் ஒன்று இருந்தது. அதில் ருக்மணி, சத்தியபாமா சமேத வேணுகோபால சுவாமிக்கு சிலை செதுக்கப்பட்டு புதிய ஆலயம் கட்டப்பட்டு நல்ல நாளில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அதன்பிறகு பல்வேறு காலகட்டங்களில் ஆலயத்தில் திருப்பணி நடைபெற்று பிற தெய்வச்சன்னதிகளும் உருவாக்கப்பட்டன.

மூன்று நிலை ராஜ கோபுரத்தின் முன்புறம் தும்பிக்கை ஆழ்வார், ஆதிசேஷன் தரிசனம் தர உள்ளே நுழைந்து பலிபீடம், கொடிமரம், கருடாழ்வார் சன்னதி, மகாமண்டபம், அர்த்த மண்டபத்தை கடந்து சென்றால் கருவறையில் ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி அற்புத காட்சி தருகிறார். அத்தி மரத்தால் ஆன திருமேனி. கர்ப்பகிரகத்தின் இடதுபுறம் ராமானுஜர், வலதுபுறம் தேசிகர் சன்னதிகள் உள்ளன.

சுவாமிக்கு வலதுபுறம் பத்மாவதி தாயார் தனிச் சன்னதியில் எழுந்தருளியுள்ளார். திருமணத்தடை ஏற்பட்டவர்கள் அவர்கள் வயதின் எண்ணிக்கையில் விரலி மஞ்சளை மாலையாகக் கட்டி பத்மாவதி தாயாருக்கு அணிவித்து வணங்கி பின்னர் அதை வீட்டுக்கு எடுத்துச் சென்று பூஜை அறையில் வைத்து வழிபட்டு வர விரைவில் அவர்களுக்குத் திருமணம் கைகூடுவதாகச் சொல்கிறார்கள். இது இக்கோவிலின் சிறப்பு பிரார்த்தனையாக கருதப்படுகிறது.

மேலும் இங்கு நரசிம்மர், சுதர்சனர், ஆண்டாள், விஷ்ணு, துர்க்கை மற்றும் ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன. பக்த ஆஞ்சநேயர் இந்தக் கோவில் கிணறு தோண்டும்போது கிடைத்தவர். இவருக்கு வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகின்றன.

சித்திரை ஒன்றாம் தேதி லட்சதீப வைபவம் கோலாகலமாக கொண்டாடப்படும். அக்னி நட்சத்திரம் தொடங்கும் நாளன்று மூலவருக்கு இளநீர் அபிஷேகம் செய்யப்படுகிறது. இதை தரிசிப்பவர்களுக்கு சூரியனின் தாக்கத்தால் உடலில் எந்தவித பாதிப்புகளும் ஏற்படாது என்பது நம்பிக்கை. வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று கருட சேவையும், ஆடி மாத வெள்ளிக் கிழமையில் தாயாருக்கு விசேஷ திருமஞ்சனமும், ஆடிப்பூரத்தன்று ஆண்டாளுக்கு ஊஞ்சல் உற்சவம் மற்றும் வளையல் சாற்று வைபவமும், கிருஷ்ண ஜெயந்தியன்று உறியடி உற்சவமும் நடைபெறும். புரட்டாசி சனிக்கிழமைகளில் வேணுகோபாலசுவாமி வெவ்வேறு அலங்காரத்தில் காட்சியளிப்பார். கார்த்திகை தீபத் திருநாளில் அகண்ட தீபம் ஏற்றப்படும். சொக்கப்பனை எரிக்கப்படும். மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் திருப்பள்ளி எழுச்சி நடைபெறும். வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபாலன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

பெற்றோர்கள் சுதர்சனர் சன்னதியில் வியாழக்கிழமைகளிலும், சுவாதி நட்சத்திரத்தன்றும் ஏலக்காய் மாலை சாத்தி பிரார்த்திக்க அவர்களது பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குகிறார்களாம்.

இக்கோவிலில் பொங்கல் பண்டிகை மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்று சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனமும், மறுநாள் மாட்டுப் பொங்கலன்று மாடு மிரட்டுதல் உற்சவமும் நடைபெறும். மாட்டுப் பொங்கலன்று மாலையில் சுற்றுப்புறத்தை சேர்ந்த கிராம மக்கள் தங்கள் கால்நடைகளை நெல்லிக்குப்பம் மந்தைவெளிப் பகுதிக்கு ஓட்டிக் கொண்டு வந்து மஞ்சள், சந்தனம் பூசி அலங்காரம் செய்வர். கோயிலிலிருந்து புறப்படும் வேணுகோபாலர் மந்தைவெளிப் பகுதிக்குச் சென்றதும் அவருக்கு மேளதாளம் முழங்க, வாண வேடிக்கைகள் நடத்தி வரவேற்பு அளிக்கப்படும். அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிடுவர். வரவேற்பை பெற்றுக்கொண்ட வேணுகோபாலர் மாடுகளை மூன்று முறை வலம் வருவார். இதைத்தான் மாடு மிரட்டுதல் என்பர். இப்படிச் சுற்றி வருவதால் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு நோய் பாதிப்பு வராது என்றும், பால் வளம் பெருகும் என்பதும் பக்தர்கள் நம்பிக்கை.