வாசுகி நாகம் சிவபெருமானை பூஜித்த தலம்! பில்லி, சூன்யம், பிரம்மஹத்தி தோஷம் போக்கும் தலம்!

தேவர்கள் அமுதம் எடுக்க மேருமலையை மத்தாகவும் வாசுகி என்ற நாகத்தை கயிறாகவும் கொண்டு பாற்கடலை கடைந்தனர்.


இந்த சம்பவத்தால் உடல் நலிவுற்ற வாசுகி ஒரு தலத்தில் வாகை மரத்தடியில் குடிகொண்டு அரனை ஆராதித்து வர விரைவில் உடல் வலிவு பெற்றாள். அந்த தலம் திருவாளப்புத்தூர். இறைவன் ரத்தினபுரீஸ்வரர், மாணிக்கவண்ணர்.

ருதுகேது என்னும் மன்னன் இப்பகுதியை ஆட்சி செய்த போது நாட்டில் கடும் பஞ்சம் நிலவியது. மக்களை காத்தருளும்படி மன்னன் இறைவனை வேண்ட, சிவன் மாணிக்க மழையை பொழிவித்தாராம். எனவெ இவருக்கு மாணிக்கவண்ணர் என பெயர் வந்ததாம்.

அர்ஜுனன் தீர்த்த யாத்திரை செய்த சமயத்தில் ஒருநாள் இப்பகுதிக்கு வந்தபோது அவனுக்கு தாகம் எடுத்தது. எங்கு நோக்கினும் நீர் இருக்கும் அறிகுறியே இல்லை. அர்ஜுனன் இறைவனை வேண்டினான். இறைவன் அவனிடம் ஒரு தண்டத்தை கொடுத்தார். இதை நீ எங்கு ஊன்றுகிறாயோ அங்கே நீர் வரும் எனக் கூறி மறைந்தார். அர்ஜுனன் தன் கையில் இருந்த வாளை வாகை மரத்தடியில் வைத்து விட்டு சற்று தொலைவு சென்று தண்டத்தை ஊன்ற அந்த இடத்தில் நீர் பெருக்கெடுத்தது. அதை அருந்தி தாகம் தீர்த்துக் கொண்டான். அந்த இடம் கண்ட தீர்த்தம் என வழங்கப்பட்டு தற்போது குமிழிக் குளமென அழைக்கப்படுகிறது.

தாகம் தீர்ந்து வாகை மரத்தடிக்கு திரும்பியபோது அர்ஜுனனின் வாளை மண்புற்று மறத்திருந்தது. அதை எடுக்க முயன்ற அர்ஜுனனை வாசுகி தடுத்தது. அர்ஜுனன் மாணிக்கவண்ணரை வேண்ட வாசுகி விலகியது. அர்ஜுனன் வாளை எடுத்துச் சென்றான். எனவே இந்த ஊர் ஆதியில் திருவாள் ஒளி புத்தூர் என அழைக்கப்பட்டு காலப்போக்கில் மருவி திருவாளப்புத்தூர் என்றாகிவிட்டது.

மகிஷனை வதைத்த பின்னர் துர்க்கை அம்மன் திகைத்த போது இங்குள்ள இறைவன் மாணிக்கவண்ணர் அவளுக்கு பிரமை நீங்க அருளினார். அதன் பின்னர் துர்க்கை அஷ்டபுஜ விஷ்ணு துர்க்கையாக இங்கே குடி கொண்டாள். இங்கே எழுந்தருளியுள்ள துர்க்கையை வழிபடுவோருக்கு பிரம்மஹத்தி தோஷம், நவகிரக தோஷம், பில்லி, சூனியம், சித்தபிரமை பாதிப்புகள் போன்றவை நீங்கும் எனப்படுகிறது.

பில்லி சூனியம் பிடித்தவர்களை இத்தலத்து துர்க்கைக்கு எதிரே அமரச்செய்து கடம் வைத்து பூஜை செய்து அந்தத் தண்ணீரை அவர்களுக்கு அபிஷேகம் செய்ய தோஷங்கள் நீங்கும் என்கின்றனர்.. ஏழு தினங்கள் தொடர்ந்து துர்க்கைக்கு அர்ச்சனை செய்து ஏழாம் நாள் அம்மனுக்கு அபிஷேகம் செய்து புதுப் புடவை வாங்கி சாத்தினால் பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்று நம்புகின்றனர்.