திருமணத்தடை போக்க யாகம் நடத்தும் கோயில் – பிரம்மா நடத்திய கல்யாணம் நடைபெற்ற தலம் எங்கு தெரியுமா?

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். ஜாதகப் பொருத்தமும் ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் பிடித்திருந்தால் மட்டும் ஒரு திருமணம் சிறப்பாக நடந்து விடாது,


அது சிறப்பாக நடக்கவும் மகிழ்ச்சி நிலைக்கவும் இறையருள் வேண்டும். அந்த வகையில் திருவேள்விக்குடியில் அருள்பாலிக்கும் இறைவன் வாலீஸ்வரரையும் இறைவி பரிமள சுகந்த நாயகியையும் வணங்கி வந்தால் திருமணம் நல்லபடியாக நடக்கும், அனைத்து தோஷங்களும் விலகி தடைபட்ட திருமணம் சிறப்பாக நடந்தேறும் என்பது நம்பிக்கை. காரணம் பார்வதிக்கும் பரமேஸ்வரனுக்கும் பிரம்மாவே முன்னின்று திருமணம் செய்து வைத்த தலம் இது.

நாகை மாவட்டம் குத்தாலத்தில் பரத மகரிஷியின் மகளாக பார்வதி அவதரித்தார். உரிய பருவம் வந்ததும் மகிரிஷி அவளுக்கு திருமணம் ஏற்பாடுகளை செய்ய அந்த பரமேஸ்வரனே மணப்பேன் என உறுதியாக இருந்தாள். அதற்கு சம்மதித்த தந்தை ஆசி வழங்கியதோடு அரணை வழிபடும் முறையையும் பார்வதிக்கு சொல்லித்தந்தார். பார்வதிதேவி விரதம் இருக்கத் தொடங்கினார். மகேசனே தன்னை மணம் செய்து கொள்ள வேண்டும் என வேண்டினாள்.

16 திங்கள் கிழமைகள் விரதமிருந்து மணலில் லிங்கம் பிடித்து வைத்து சிவபூஜை செய்தால் 17வது திங்களன்று இறைவன் மணவாளேஸ்வரராக பார்வதியின் முன் தோன்றி அவளை மணப்பதாக வாக்களித்தார். ஒரு நல்ல நாளில் கோயிலின் பின்புறம் உள்ள தீர்த்தத்தில் இறைவனும் இறைவியும் நீராடினர். பிறகு சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் பொருட்டு வேள்விகள் செய்தனர். அதன் பின் பிரம்மாவே முன்னின்று நடத்தி வைக்க இறைவன் இறைவி திருமணம் நடைபெற்றது. இறைவன் இறைவியை மணந்து கொண்ட தலம் ஆதலால் இத்தலம் திருவேள்விக்குடி என்று அழைக்கப்படுகிறது.

பாடல் பெற்ற இத்தலத்தின் அமைப்பு அழகுற அமைந்துள்ளது/ மூன்றடுக்கு ராஜகோபுரத்தைக் கடந்ததும் நந்திகேஸ்வரர், அடுத்து மகாமண்டபம். இறைவன் கிழக்கு நோக்கி அருள் பாலிக்க, இறைவி தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறாள். வெளி பிரகாரத்தில் விநாயகர். வள்ளி தெய்வானையுடன் முருகன் சன்னதிகள் உள்ளன. சூரியன், பைரவர், நால்வரின் திருமேனிகளும் இருக்கின்றன. நடராஜர், அகத்தியர், தட்சிணாமூர்த்தி, சங்கரநாராயணன், லிங்கோத்பவர், ஈஸ்வரர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர் தரிசனமும் கிடைக்கிறது.

இறைவியின் பிரார்த்தனையை நிறைவு செய்து இறைவன் அவரை மணந்த தலம் என்பதால் இங்கு வந்து வேண்டிடும் ஆண் பெண்களின் அனைத்து தோஷங்களையும் விலக்கி அவர்களது திருமணம் நல்லபடியாக நடைபெற இறைவனும் இறைவியும் அருள்பாலிப்பதை ஏராளமான பக்தர்கள் அனுபவப்பூர்வமாக உணர்ந்து சொல்கிறார்கள்.

பௌர்ணமி தினங்களில் இங்கே திருமணதடை போக்கும் யாகம் நடத்தப்படுகிறது. திருமணத்தடை உள்ளவர்கள் இந்த யாகத்தில் கலந்து கொண்டால் தடை விலகும் என்பது நம்பிக்கை. திருமணம் முடிந்ததும் தம்பதியர் இங்கு வந்து இறைவனுக்கும் இறைவிக்கும் அர்ச்சனை செய்து நன்றி சொல்லி வழிபடுகின்றனர். இறைவனின் திருமணம் நடைபெற்ற தலம் இது என்பதால் இங்கு நவக்கிரகங்களும், கொடிமரமும் கிடையாது. அதற்கு பதில் ஈசனே ஈசான்ய மூலையில் தனிக்கோவிலில் அமர்ந்துள்ளார்.

நவகிரக தோஷம் உள்ளவர்கள் 48 அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வைத்து இவரை வழிபட தோஷங்கள் விலகுமாம். அரச குமாரன் ஒருவனுக்கு திருமணம் நிச்சயம் செய்திருந்த நிலையில் பெண்ணின் தாய் தந்தையர் திடீரென இறந்துவிட திருமணம் நின்றுவிட்டது. அரசகுமாரன் இத்தலம் வந்தான். நின்றுபோன திருமணம் நடைபெற வேண்டும் என வேண்டிக் கொள்ள சிவபெருமான் ஒரு பூதத்தை அனுப்பி மணப் பெண்ணை அழைத்து வந்து அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்ததாக புராண கதை ஒன்று சொல்லப்படுகிறது.

ஒரு சமயம் வினைப்பயனால் சுந்தரர் தோல் நோயால் அவதிப்பட்டார். இறைவன் ஆணைப்படி அவர் இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி வழிபாடு செய்ய அவரது தோல் நோய் நீங்கியது. திருமண தோஷம் மட்டுமல்லாது, சர்ப்ப தோஷம், கிரக தோஷம், பாவ தோஷம் என பல்வேறு தோஷங்களையும் நீக்கும் பரிகார தலமாக இத்தலம் விளங்குகிறது.