வீடு கட்டுவதில் தடங்கலா? இந்த கோவிலுக்குச் சென்று வழிபட்டு வீடு கட்டத் தொடங்குங்க!!!

திருச்சியில் இருந்து துறையூர் செல்லும் வழியில், சமயபுரம் டோல்கேட்டில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீபூமிநாதர் கோவில்.


இந்தத் தலத்து இறைவன் வீடு மனை வாங்குகிற யோகத்தை அருள்கிறார் என்பதால், இவருக்கு ஸ்ரீபூமிநாதர் என்கிற திருநாமம் அமைந்ததாம். அம்பாள்- ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி.

மனை அல்லது நிலம் வாங்குபவர்கள், 'இவ்ளோ காசு- பணம் சம்பாதிச்சு என்ன பயன்? சொந்தமா ஒரு வீடு வாங்கற யோகம் அமைய மாட்டேங்குதே..’ என்று புலம்புவர்கள், இங்கு வந்து சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு, அம்பாளையும் ஸ்வாமியையும் பிரார்த்தித்தால், விரைவில் வீடு- மனை வாங்கும் யோகம் கிடைப்பது உறுதி எனப் பூரிக்கின்றனர், பக்தர்கள். அமாவாசை நாளில் இங்கு வந்து வழிபடுவது சிறப்பு. அதிலும், அமாவாசையும் புதன்கிழமையும் சேர்ந்து வரும் நாளில், வீடு- மனை தொடர்பான சிக்கல்களில் இருப்பவர்களும், வாங்க வேண்டுமே என்கிற ஆவலில் இருப்பவர்களும் வழிபடுவது கூடுதல் பலனைத் தரும் என்பது நம்பிக்கை.

இங்கே, வாஸ்து பரிகார பூஜையும் விசேஷம். நிலம் வாங்கும் முன்போ அல்லது கட்டட பணியில் தடை என்றாலோ, நிலத்தின் வட கிழக்கு மூலையில் இருந்து பிடிமண் எடுத்து, அதை மஞ்சள் துணியில் கட்டி, பூஜையறையில் வைத்து வணங்கி வரவேண்டும். பிறகு, வாஸ்து நாளில் இங்கு அந்தப் பிடிமண்ணை வைத்து ஸ்ரீபூமிநாதருக்கு பூஜை செய்ய வேண்டும். அர்ச்சனை முடிந்தபின் ஆலயத்தை வலம் வர வேண்டும்.

முதல் சுற்றின்போது, மண்ணில் ஒரு பிடியை ஆலய தல விருட்சமான வில்வ மரத்தடியில் போட வேண்டும். இரண்டாம் சுற்றின்போது, மற்றொரு பிடி மண்ணை வன்னி மரத்தடியில் போடுகிறார்கள். அப்போது மகா ருத்ர யாகம் செய்த சாம்பலில் ஒரு பிடி எடுத்து தங்கள் கையில் இருக்கும் துணி முடிப்பில், எஞ்சிய ஒரு பிடி மண்ணோடு சேர்த்து வைத்துக் கொள்கின்றனர்.

மூன்றாவது முறை ஆலயத்தை வலம் வந்து நவக்கிரக நாயகர்களை வழிபடுகிறார்கள். வீட்டிற்கு வந்ததும், மண்ணோடு கலந்த சாம்பலை வீட்டின் பூஜை அறையில் வைத்து விடுகிறார்கள். 5 நாட்களுக்குப் பின்னர், அதில் பாதியை எடுத்து மண் எடுக்கப்பட்ட இடத்தில் போட வேண்டுமாம். அப்படி செய்தால் மூன்று மாதங்களுக்குள் நினைத்தது நடக்கும் என்கிறார்கள்.

பிராகாரத்தில் உள்ள வன்னிமரத்தடியில் இருந்து மண் எடுத்துக்கொண்டு, ஸ்ரீபூமிநாதரை வணங்கிவிட்டு, மனையின் வடகிழக்கு மூலையில் போட்டுவிட்டு வேலையைத் துவக்கினால், வீடு மற்றும் கட்டடப் பணிகள் தடையின்றி நடைபெறுமாம்.