கொரோனாவை தடுக்க பனை ஓலை மாஸ்க்..! தென் மாவட்ட மக்களின் அசத்தல் கண்டுபிடிப்பு!

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க வித்தியாசமாக பனை ஓலையில் முக கவசம் செய்து தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.


தற்போது உலகையே ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களை பலி வாங்கியுள்ளது. மக்களிடையே அதிவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமே மக்களுக்கு கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே செல்லும் போது மக்கள் முக கவசம் அணிந்து வெளியே சென்று வருகிறார்கள். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் அருகே குளத்தூர் என்ற பகுதியில் ஏராளமான பனை மரம் ஏறும் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது கோடை வெயிலை தடுக்க பதநீர் சீசன் வந்து விட்டதால் கருப்புக்கட்டி தயாரிக்கும் வேலையில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வெளியே வேலைக்கு செல்லும் பொழுது பனை ஓலையால் ஆன முக கவசம் செய்து பனை மட்டை நாரால் இருபுறமும் இணைத்து முகத்தில் முகக் கவசமாக அணிந்துள்ளனர்.

கொளத்தூரில் உள்ள சுப்பிரமணியபுரத்தில் குணசேகரன் என்ற தொழிலாளி பனை ஓலையால் செய்யப்பட்ட முகம் கவசத்தை அணிந்து வேலை செய்து வருகிறார். அவருக்கு உதவியாக அவரது மனைவியும் பனை ஓலையால் செய்யப்பட்ட முக கவசம் அணிந்து அவருடன் வேலை செய்து வருகிறார். மேலும் பன ஓலையால் செய்யப்பட்ட முக கவசங்களை அந்த பகுதியில் வாழும் மக்களுக்கு இவர் இலவசமாக அளித்தும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பனை ஓலையில் செய்யப்பட்ட முக கவசங்களை அணியும்போது குளிர்ச்சியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என்று அப்பகுதியில் வாழ்ந்துவரும் பனை ஓலை தொழிலாளர்கள் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.