உடல்நிலை பாதிப்பு காரணமாகவே தற்கொலை செய்துகொள்வதாகவும், நடத்தையில் சந்தேகப்படவேண்டாம் எனவும் திருமணத்திற்கு முன் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் கடிதம் திருவாரூரில் கைப்பற்றப்பட்டுள்ளது
திருமண வாழ்க்கைக்கு என் உடல் ஒத்துழைக்காது..! நிச்சயதார்த்தம் ஆன இளம் பெண்ணின் பகீர் முடிவு! சிக்கிய பரபரப்பு கடிதம்!
திருவாரூர் மாவட்டம் காட்டூரை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகள் பிரதீபாவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து ஜனவரி மாதம் 30ம் தேதியன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக ரவிச்சந்திரன் தனது மகளின் திருமண ஏற்பாடுகளை ஜரூராக கவனித்து வந்தார். வாழும் இடத்தில் சந்தோஷமாக இருக்க தேவையான நகை, ஆடைகள், வீட்டு உபயோக பொருட்கள் என பார்த்து பார்த்து வாங்கிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் திருமணம் ஏற்பாடுகள் தொடர்பாக ரவிச்சந்திரன் வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது மகளைக் காணவில்லை. வீட்டில் ஒரு கடிதம் மட்டுமே இருந்தது. அதை படித்துப் பார்த்த ரவிச்சந்திரன் அதிர்ச்சி அடைந்தார். அதில், அப்பா என்னை மன்னிக்க வேண்டும். எனக்கு அடிக்கடி உடல்நிலை சரி இல்லாமல் போகிறது. அதனால் திருமணத்திற்கு பிறகு என்னால் வாழ முடியுமா என தெரியவில்லை. எனவே நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன்.
மற்றபடி என்னை பத்தி தவறாக நினைக்க வேண்டாம். என் மரணத்திற்கு காதல் விவகாரம் ஏதும் இல்லை என்பதால் நடத்தையில் சந்தேகப்பட வேண்டாம் என எழுதியுள்ளார். இதையடுத்து மகளை தேட ஆரம்பித்தபோது கிராமத்தில் உள்ள பிடாரிக்குளத்தில் குதித்து பிரதீபா உடல் மிதப்பதாக தகவல் தெரியவந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பிரதீபா உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.