பிப்ரவரி 7க்குள் தேர்தல் நடக்காது... என்னா பெட் எடப்பாடி?

திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல்நடத்த தயாராக இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியிருந்தாலும், அப்படி நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்றும், அதற்கான காரணங்களையும் சொல்கிறார் அ.தி.மு.க. புள்ளி ஒருவர்.


திருப்பரங்குன்றம் தொகுதி தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், திருவாரூர் தொகுதிக்கு மட்டும் பிப்ரவரி 7க்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று மதுரை, உயர் நீதிமன்ற கிளையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

ஆனால்,  நீதிமன்றத்தில் சொன்னபடி தேர்தல் நடத்துவதற்கு வாய்ப்பே இல்லை என்று அ.தி.மு.க. முக்கியப் புள்ளி ஒருவர் அடித்துச் சொல்கிறார். என்ன காரணமாம்?

எடப்பாடி அரசு ஒவ்வொரு நாளும் போனஸ் வாழ்க்கை போன்று காலத்தை கடத்திக்கொண்டு இருக்கிறது. இந்த சூழலில் திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்துவது தற்கொலைக்கு சமம். ஏனென்றால் திருவாரூர் தி.மு.க.வுக்கு நம்பிக்கை தரும் தொகுதி. 

அடுத்த சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வரயிருக்கும் சூழலில் ஆர்.கே.நகர் போன்று இடைத்தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டால், அது கூட்டணிக் கணக்கை முழுமையாகப் பாதித்துவிடும். மேலும் தினகரன், திமுக, அதிமுக ஆகிய கட்சிகளும் பலமும் வெளிப்படையாகத் தெரிந்துவிடும். அதனால் ஏதேனும் காரணத்தைச் சொல்லி இந்தத் தேர்தலையும் தள்ளிவைக்கவே அரசு முயற்சி எடுக்கும் என்று சொன்னார்.

இதனை நேரடியாக தடுப்பதற்கு முடியாத சூழலில் வேறு நபர்கள் மூலம் கேஸ் போட்டு தடுக்கும் முயற்சி எடுக்கப்படும். ஆனால், எப்படியும் தேர்தலை நிறுத்திவிடுவார்கள் என்று சொன்னார்.

இதையெல்லாம் மீறி எடப்பாடி தேர்தல் நடத்திவிட்டால், அந்தத் தொகுதியில் எடப்பாடி ஜெயித்துவிட்டால் என்று கேட்டோம்.

அத்தைக்கு மீசை முளைத்தாலும் முளைக்கும், திருவாரூருக்கு மட்டும் தேர்தல் நடக்காது, என்னா  பெட் என்கிறார். 

அதையும் பார்த்துவிடலாம்!