40 தொகுதியில் திமுகவுக்கு எத்தனை? அதிமுகவுக்கு எத்தனை? டைம்ஸ் நவ் வெளியிட்ட பரபர கருத்துக் கணிப்பு!

40 தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக கூட்டணிக்கு எத்தனை தொகுதிகள் என்று பரபரப்பு கருத்துக் கணிப்பை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.


இந்திய அளவில் முன்னணி ஆங்கில ஊடகமான டைம்ஸ் நவ் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் டைம்ஸ் நவ் குழுவினர் நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியாகி உள்ளது. அதன்படி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான அனைத்து மாநிலங்களிலும் எந்தெந்த கட்சிக்கு எத்தனை சீட் கிடைக்கும் என்பதை டைம்ஸ் நவ் கணித்துள்ளது.

அதன்படி தமிழகத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் அதாவது புதுச்சேரியையும் சேர்த்து நடைபெற்ற கருத்துக் கணிப்பில் திமுக மற்றும் அதிமுக கூட்டணிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பதை டைம்ஸ் நவ் கணித்து வெளியிட்டுள்ளது. அதிமுக பாஜக பாமக தேமுதிக என பலமான கூட்டணியுடன் களம் இறங்கியுள்ளார் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழகத்தில் வெறும் 7 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று டைம்ஸ் நவ் தெரிவித்துள்ளது.

அதேசமயம் திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு 33 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்று டைம்ஸ் நவ் கணித்துக் கூறியுள்ளது. இந்த கருத்து கணிப்பு வெளியானது முதலே திமுக தரப்பு குஷியாகியுள்ளது. காரணம் டைம்ஸ் நவ் பாஜக ஆதரவு தொலைக்காட்சி என்று கூறப்படுவதுண்டு. அந்த தொலைக்காட்சியே திமுகவுக்கு ஆதரவாக கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது திமுகவினரை திக்குமுக்காட வைத்துள்ளது.